இலங்கையில், சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் வகைகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெண்களை வெள்ளையாக்க பயன்படுத்தப்படும் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் இருக்க வேண்டிய பாதரசத்தின் அளவு அங்கீகரிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருப்பதாக இலங்கை கைத்தொழில் தொழிநுட்ப நிறுவன அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இது தொடர்பில் கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை பிரிவின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி ஈ. யு. ரஞ்சனா மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த வாரம் நுகர்வோர் அதிகாரசபையின் விசேட அதிரடி சோதனைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, இறக்குமதியாளர் அல்லது உற்பத்தியாளரின் விபரங்கள் இன்றி சட்டவிரோத லோஷன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவற்றில் 7 வகையான உடல் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் 6 வகையான பாதரசத்தின் அளவு ஒரு கிலோவிற்கு 8.1 மில்லிகிராமிலிருந்து 31.540 மில்லிகிராம் வரை மிக அதிகமாக இருந்ததாக இலங்கை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆய்வுக்கூடம் அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தையில் அதிகளவில் விற்பனையாகும் உடலை வெண்மையாக்கும் கிரீம்களில் பாதரசம் அதிகம் உள்ளதாகவும், புற்றுநோய் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், ஒவ்வொரு உறுப்புக்கும் பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான கிரீம்கள் மற்றும் திரவங்களை கொள்வனவு செய்யும் போது, குறிப்பாக இறக்குமதியாளரின் பெயர் மற்றும் முகவரி இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படுமாயின் அங்கு பெயர் மற்றும் முகவரி எழுதப்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.