முச்சக்கர வண்டிகளில் ஆசணப்பட்டி அமைக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற சட்டமூலம் ஒன்றை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக தரைப் போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டிகளில் செல்லும் பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் கூறுகின்றார்.
தற்போது இலங்கையில் முச்சக்கர வண்டிகள் தேவைக்கும் அதிகமாக இருப்பதாகவும், அதன் காரணமாக முச்சக்கர வண்டி இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த வேண்டி இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நேற்று காலை செத்சிறிபாயவில் இடம்பெற்ற, பாதுகாப்புடனான நவீன முச்சக்கர வண்டி ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
தற்போது பாதைகளில் பயணிக்கும் முச்சக்கர வண்டிகளில் பல தொழில்நுட்ப குறைபாடுகளுடன் இருப்பதாகவும், அவற்றை சரி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் கூறினார்.