முதல் நாள் இரவு வந்து சென்ற மர்ம வாகனம்~ வவுனியாவில் நால்வர் மரணத்தில் திடீர் திருப்பம்!

0
96

வவுனியா குட்செட் வீதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலங்களாக நேற்று முன்தினம் காலை மீட்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முதல்நாள் இரவு அந்த வீட்டுக்கு ஹயஸ் வாகனம் ஒன்று வந்து சென்றுள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்த வாகனத்தில் வந்தவர்கள் யார் என்பது தெரியாத நிலையில் அது தொடர்பாக பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் வவுனியா குட்செட் வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து கணவன், மனைவி, இரு குழந்தைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தனர்.

கணவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உறங்கிய நிலையிலும் உயிரிழந்து காணப்பட்டனர். உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா பொதுமருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று சுகாதாரத் துறையினரால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை தாமதமாகியிருந்தது.

அதேவேளை, பொலிஸாரின் விசாரணையில் குடும்பத்தினர் சடலங்களாக மீட்கப்பட்ட தினத்துக்கு முதல்நாள் இரவு அந்த வீட்டுக்கு ஹயஸ் ரக வாகனம் ஒன்று வந்து சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதேநேரம், முதல்நாள் மாலை மனைவி கடையில் ஐஸ்கிறீம் வாங்கிச் சென்றிருந்த நிலையில் வீட்டில் அந்த ஐஸ்கிறீம் கண்டறியப்படவில்லை. இந்த விடயங்கள் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மனைவி மற்றும் குழந்தைகளின் கழுத்துகள் நெரிக்கப்பட்ட அடையாளங்கள் காணப்பட்டிருந்த நிலையில், கொலை என்ற கோணத்தில் விசாரணைகளை ஏற்கனவே தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.இரத்த மாதிரிகள், சிறுநீர் மாதிரிகள், இரப்பையில் இருந்த உணவு மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும், முதற்கட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் மனைவி, குழந்தைகள் உடல்களில் நஞ்சு மாதிரிகள் எவையும் கண்டறியப்படவில்லை என்றும் அறியமுடிகின்றது.

குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளன என்றும், மனைவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கருதுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here