ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் அக்சர் படேல், லலித் யாதவ் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை டெல்லி கேபிடல்ஸ் அணி. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 5 விக்கெட்கள் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான இஷான் கிஷன் 48 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ரோஹித் சர்மா 32 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களும், திலக் வர்மா 15 பந்துகளில் 22 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
அன்மோல்பிரீத் சிங் 8, கெய்ரன் பொலார்டு 3, டிம் டேவிட் 12 ரன்களில் நடையை கட்டினர். டேனியல் சேம்ஸ் 7 ரன்கள் சேர்த்தார். டெல்லி சார்பில் குல்தீப்யாதவ் 3, கலீல் அகமது 2 விக்கெட் வீழ்த்தினர். 178 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி அணி ஒரு கட்டத்தில் 15 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்திருந்தது. டிம் ஷெய்பர்ட் 21, மன்தீப் சிங் 0, ரிஷப் பந்த் 1, பிரித்வி ஷா 38, ரோவ்மன் பொவெல் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷர்துல் தாக்குர் 11 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் விளாசிய நிலையில் பாசில் தம்பி பந்தில் வெளியேறினார். கடைசி 5 ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 56 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் லலித் யாதவுடன் இணைந்து, அக்சர் படேல் மட்டையை சுழற்றினார்.
அக்சர் படேல் 17 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 38 ரன்களும் லலித் யாதவ் 38 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 48 ரன்களும் விளாச, டெல்லி 18.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 6-வது விக்கெட்டுக்கு அக்சர் படேல், லலித் யாதவ் ஜோடி 30 பந்துகளில், 75 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தது. டேனியல் சேம்ஸின் 3 ஓவர்களில் 57 ரன்களும், பும்ராவின் 3.2 ஓவர்களில் 43 ரன்களும் விளாசப்பட்டிருந்தது.