மூக்கை உடைப்பேன் என்றவருக்கு நாக்கில் என்ன சுளுக்காமா? சவாலை சரியாக ஏற்க வேண்டும் அ’தில்’தான் தில் இருக்கிறது என்கிறார் திலகர் எம்.பி
தொலைகாட்சி விவாதமாக இருக்கட்டும் வானொலி விவாதமாக இருக்கட்டும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக நான் பந்தா காட்டாமல் யாருடனும் அரசியல் விவாதத்துக்கும் கலந்துரையாடலுக்கும் சென்றிருக்கிறேன். ஆனால், மூக்கை உடைப்பேன் என்று சவால் விட்டவருக்கு நாக்கில் எத்தனை பலம் இருக்கிறது என்பதே எனது சவால் என்ற அடிப்படையில் அப்படி பேசிய பாராளுமன்ற உறுப்பினரான ஆறுமுகத்துடனேயே நான் இந்த விவாதத்தில் பேசத்தயார். வேறு யாருடனும் அல்ல. நானும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். ஒரு கட்சியின் செயலாளர். அவரும் அப்படியே.
என்னோடு விவாதிக்க அவர் வேறு என்ன தராதரம் பார்க்கிறார் எனத் தெரியவில்லை. கல்வித் தராதரம் தேவையெனில் அதனை முன்வைத்து களத்தில் இறங்கவும் நான் தயார். அவரும் முன்வைக்கட்டும். மூக்கை உடைப்பேன் என்றவருக்கு நாக்கில் என்ன சுளுக்காமா? என்று தொழிலாளர் தேசிய முன்னணியின செயலாளர் நாயகமும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார் .
இ.தொ.கா தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் மேதின உரைக்கு சவால் விடுத்து விவாதத்திற்கு அழைத்திருந்த திலகர் எம்பிக்கு ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானும், மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் ஆகியோர் அளித்த பதில் குறித்துக் கருத்து கேட்டபோதே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். அத்துடன் அவர்கள் கூறுவதுபோல என்னோடு விவாதிக்க அவர்களின் இரண்டாம் நிலைத் தலைவர்கள்தான் வருவார்களெனில் அவர்களுடன் விவாதிக்க எங்கள் அமைச்சரின் உதவியாளரும் எங்கள் இளைஞர் அணி உறுப்பினருமான தம்பி சுப்பையா கமலதாசன் போதும் என்பதே எனது நிலைப்பாடு.
எனக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகனுக்கும் உள்ள தகுதி வேறுபாடு என நான் கருதுவது, என் தாத்தா அமைச்சரில்லை, என் அப்பா அமைச்சரில்லை, என் மருமகன் மாகாண சபை மந்திரி இல்லை. என் மகனை நான் அரசியலுக்கு அழைத்துவரப்போவதுமில்லை. நான் தோட்டத் தொழிலாளியின் பேரன். தொழிலாளியின் மகன். இதுதான் பிரச்சினை என்றால் இந்த உரையாடல் தொடரை நிறுத்திவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்போம். எனக்கு ஆயிரம் வேலை இருக்கிறது என்றும் தெரிவித்து உள்ளார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர்