மே தின நிகழ்வுகள் இம்முறை தோட்டவாரியாகவும், பிரதேச வாரியாகவும் இடம்பெறும் – சோ.ஸ்ரீதரன் தெரிவிப்பு

0
99

நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தின நிகழ்வுகள் இம்முறை தோட்டவாரியாகவும், பிரதேச வாரியாகவும் இடம்பெறும் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதி செயலாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ. ஶ்ரீதரன் தெரிவித்தார்.அட்டனிலுள்ள கட்சி தலைமையகத்தில் இன்று (29.04.2022) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.மே தினம் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாபெரும் தொழிற்சங்கத் தலைவர் அமரர் வெள்ளையனால், 1965 மே முதலாம் திகதி தொழிலாளர் தேசிய சங்கம் நிறுவப்பட்டது. தொழிலாளர்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொடுக்கவும், தொழிலாளர்களின் நலன்புரி விடயங்களுக்காகவும் சங்கம் தீவிரமாக செயற்பட்டது. தற்போதும் அதே வழியில் செயற்படுகின்றது.

தற்போதைய தலைவர் பழனி திகாம்பரம் அமைச்சராக இருந்த காலகட்டத்தில், மலையகத்தில் தனி வீட்டு திட்டத்தை ஏற்படுத்தி, புதிய திருப்பத்தை ஏற்படுத்தினார்.

எமது 57 ஆவது மே தின நிகழ்வுகள் தோட்டவாரியாகவும், பிரதேச வாரியாகவும் இம்முறை நடைபெறும்.

அதேவேளை, ஜனாதிபதியும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியே மக்கள் போராடிவருகின்றனர். ஆனால் மலையகத்தில் இடம்பெற்ற தன்னெழுச்சி போராட்டத்தை இ.தொ.கா. தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சித்தது. மக்கள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டனர்.

ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக வேண்டும் என்பதற்கு பதிலாக, பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தே போராட்டம் என மக்கள் திசை திருப்பினர். இ.தொ.கா. அரசுக்கான ஆதரவை இன்னும் முழுமையாக விலக்கிக்கொள்ளவில்லை.” – என்றார்.

 

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here