வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாரதப் பிரதமரின் மலையக விஜயத்தின்போது ஆயிரமாயிரமாய் நாம் திரண்டு அவருக்கு வரவேற்பளிப்பதன் மூலம் எம் சமூகத்தின் சார்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளின் நியாயத்தினை அவர் முழுமையாகப் புரிந்துக்கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும் என்று இந்தியவம்சாவளி மலையகத் தமிழர்களின் சார்பில் தான் கோரிக்கை விடுவதாக மலையக தொழிலாளர் முன்னணியின் சிரேஸ்ட உபதலைவர் ஜெயபாரதி தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் செறிந்து வாழும் நுவரெலியா மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைப்பதற்கு பாரதப் பிரதமர் வருகை தருவது ஒரு வரலாற்று பதிவாகும்.
சகல பாகுபாடுகளுக்கும் அப்பால் 15 இலட்சம் இந்திய வம்சாவளி மலையக சமூகம் என்ற அடையாளத்துடன் இவரை வரவேற்று கௌரவிக்க வேண்டும்.இந்து மாகா சமுத்திரத்தின் ஆதிக்கத்தினை தன்னகத்தே கொண்டு வல்லரசாக வளர்ந்து வரும் இந்தியா எமக்கு தொப்புள் கொடி நாடாகாவும் இலங்கையின் அனைத்து இன மக்களினதும் கலாசார பண்புகளுடன் ஒன்றிணைந்த நாடாகவும் இலங்கை அரசியலில் நெருங்கிய நட்பு நடாகவும் உள்ளது.இலங்கையை தயாகமாக கொண்டு வாழும் எமக்கு இந்தியாவுடனான தொப்புள் கொடி உறவினை ஒரு போதும் துண்டிக்க முடியாத அளவுக்கு கலாசாரம் மொழி பண்பாடு வழிபாடு போன்ற அனைத்து அம்சங்களிலும் உரிமையுள்ள உறவினை பேணி வருகின்றோம்.
இலங்கையின் சுமார் இரு நூற்றாண்டு வரலாற்றினை கொண்டுள்ள நாம் இவ்வரலாற்று காலத்திற்கேற்ப சமூக வளர்ச்சியை இன்னும் பெறவில்லை என்பதனை எவருமே மறுக்க மாட்டார்கள்.ஒப்பீட்டு அளவில் நாம் முன்பைவிட ஓரளவு வளர்ச்சியடைந்துள்ளபோதிலும் ஏனைய சமூகங்களின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது பல வருடங்கள் பின்னடைவினையே முகம் கொடுத்து வருகின்றோம்.சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் வெறுமனே தோட்ட தொழிலாளர்களாக அடையாளம் காணப்பட்ட எமது சமூகம் இன்று பல்துறைகளிலும் வளர்ச்சியடைய முயற்சித்தாலும் கூட இதற்கான உந்து சக்தியும் ஒத்துழைப்புக்களும் குறைவாகவே கிடைக்கின்றன.
இன்று எமது சமூகத்தின் சார்பில் அமைச்சர்கள் பாராளுமன்ற மாகாணசபை உறுப்பினர்,தொழில் அதிபர்கள், பட்டதாரிகள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள்,என்று பலர் உருவாகி வந்தாலும் ஒரு சமூக அந்தஸ்துடன் தேசிய அங்கீகாரத்துடன் வாழ்வதற்கு எமது புதிய தலை முறையினர் ஆர்வம் கொண்டுள்ளார்கள் ஆனால் இலங்கையின் ஏனைய சமூகங்களின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது தற்போதைய எமது வளர்ச்சி வீதம் நிச்சயமாக ஆரோக்கியமானதாக இல்லை இதற்காக இன்னும் 25 ஆண்டுகள் நாம் பயணித்தால் இக்காலத்துக்குள் எம்மைவிட இன்னும் 25 ஆண்டுகள் முன்னேறியிருக்கும் ஆகவே எமது சமூகத்தின் சகல மட்டத்திலான வளர்ச்சிக்கும் இலங்கை அரசாங்கத்திடம் போலவே இந்தியாவின் பங்களிப்பினையும் நாம் அதிகமாக பெற்று ஒரு பாய்ச்சலான வளர்ச்சிக்கு அத்திவாரம் இடவேண்டும். இந்தியா பற்பல திட்டங்களை வகுப்பதற்கு நாம் பிரேரனைகளை முன்வைக்க வேண்டும்.இலங்கையின் சிறுபான்மை இன மக்களின் நலனுக்காக கண்டியிலும் யாழ்ப்பாணத்திலும் தமது உதவி தூதரங்களை கொண்டுள்ள இந்தியா எமது சமூக இயக்கத்திற்காக இன்னும் அக்கரை கொண்டு உதவவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
பல்வேறு உள்நாட்டு சவால்களிலிருந்து படிப்படியாக மீண்டு வரும் இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியாவின் உதவி மிகவும் ஆறுதலாகவே இருப்பதுபோலவே இந்தியாவின் நேரடி வம்சாவளியாக வாழ்ந்து வரும் எமது தேவைகளில் இன்னும் அதிகமாக பங்களிப்பு செய்வதற்கு இந்திய பிரதமரின் வருகை அடித்தளம் இடவேண்டும்.இவரது வருகை வெறுமனே ஒரு விழாவிற்கான வருகையாக மாத்திரம் அமைந்து விட கூடாது இந்த திறப்பு விழாவோடு எமது அடிப்படை தேவைகளான கல்வி,கலாச்சாரம்,வீடமைப்பு தொழில்வாய்ப்பு,போன்ற தேவைகளுக்கான திறப்பு விழாவாகவும் இது அமைய வேண்டும்.இதேவேளை அண்மையில் இந்திய உதவித் தூதுவர் தெரிவித்ததாக வெளிவந்த ஊடக செய்தியையும் நாம் கவனத்தில் எடுக்கவேண்டும்.
மலையக சமூகம் சார்ந்த தேவைகளுக்கான கோரிக்கைகள் மக்கள் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்படுவது குறைவு என்பதுபோன்று அவர் கருத்து தெரிவித்திருந்தார்.எம் சமூகம் சார்ந்த அடுத்தக்கட்ட வளர்;ச்சிக்கு இந்தியாவின் உதவியை மாத்திரமல்ல இலங்கை அரசாங்கத்தின் உதவியையும் நாம் முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் இதற்கான வேலைத்திட்டங்களுடனான அழுத்தங்களை எமது பிரதிநிதிகள் வழங்க வேண்டும்.இந்தியா வழங்கும் உதவிகளை இறுகபற்றி பயனுள்ளதாக்கிகொள்ள வேண்டும்.எமது 200 வருட வரலாற்றில் இந்திய பிரதமர் ஒருவர் நாம் வாழும் பிரதேசத்திற்கு அபிவிருத்தி திட்ட ஆரம்பத்திற்காக மேற்கொள்ளும் இந்த சரித்தபூர்வமான விஜயம் அர்த்தமுள்ள ஆரம்பமாக அமைய வேண்டும் என்றார்.
கேதீஸ்