காத்தான்குடி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் (Jaffna) வந்து, தனது மகளுக்கு சிறுநீரக சிகிச்சைக்கு பணம் வேண்டும் என பொய் கூறி யாசகம் பெற்ற தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் யாழ்ப்பாணம் (Jaffna) – கல்வியங்காடு சந்தை பகுதியில் 4 வயது சிறுமியை சக்கர நாற்காலியில் இருத்தி, சிறுமியின் இரு சிறுநீரகங்கள் பழுதடைந்துள்ளதாகவும் அதற்கான சிகிச்சைக்கு பண உதவி செய்யுமாறு கோரி யாசகம் பெற்றுள்ளார்.
யாழில் நிலவும் கடுமையான வெப்பமான காலநிலையில், வெயிலுக்குள் சிறுமியை சக்கர நாற்காலியில் இருத்தி வைத்து ஒருவர் யாசகம் பெறுவதாக கோப்பாய் காவல்துறையினருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சிறுமியை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் யாசகம் பெற்ற நபரையும் கைது செய்துள்ளனர்.
இதன்போது, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் சிறுமிக்கு எவ்விதமான உடல்நல குறைப்பாடுகளும் இல்லை எனவும் சிறுமி ஆரோக்கியமாக உள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது, தான் காத்தான்குடி பகுதியை சேர்ந்தவர் எனவும் சிறுமி தனது மகள் எனவும் கூறியுள்ளார்.
மேலும் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்தியபோது அவரை விளக்கமறியலில் வைக்குமாறும், சிறுமியை சிறுவர் காப்பகத்தில் அனுமதிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.