நானுஓயா காவல்துறை பிரிவுக்குட்பட்ட- ரதாலை குறுக்கு வீதியில் கார்லிபெக் பகுதியில் பேருந்தொன்று வீதியைவிட்டு விலகி, மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.நேற்று (8) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின்போது, பேருந்தில் சுமார் 47 பேர் பயணித்துள்ளதுடன், அவர்கள் அனைவரும் எவ்வித பாதிப்புகளும் இன்றி உயிர்த்தப்பியுள்ளனர். அவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தின் பின்னர் பேருந்திலிருந்து மீட்கப்பட்ட அனைவரும் அப்பகுதியில் உள்ள வாசிகசாலையொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஹொரணையிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று, மீண்டும் திரும்பியபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
வீதியை விட்டு விலகிய பேருந்து, மரத்தின் மீது மோதி நிறுத்தப்பட்டதால், ஏற்டவிருந்து பாரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
பேருந்தின் தடுப்பு தொகுதி இயங்காமல் போனமையினால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ள நானுஓயா காவல்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
டி சந்ரு