மலையகத்தை தளமாக கொண்டு செயற்படுகின்ற மிகவும் பிரபலமான ஆஞ்சநேயர் ஆலயத்தில் பெருந்தோட்ட தமிழர்கள் யாழ்ப்பாண தமிழர்கள் என இரண்டு பிரிவாக வகுத்து செயற்பட்டு வருவதாக அந்த பிரதேசத்தில் வசிக்கின்ற பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றார்கள்.
இது தொடர்பாக தெரியவருவதாவது
கண்டி நுவரெலியா பிரதான வீதியில் இறம்பொடை பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான ஆஞ்சநேயர் ஆலயத்திலேயே இந்த செயற்பாடுகள் நடைபெற்று வருவதாக அங்கிருக்கின்ற பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் மிகவும் சிறப்பாக அனைத்து தரப்பினரையும் ஒன்றினைத்து செயற்பட்டு வந்த இந்த ஆலயமானது அண்மித்த காலப்பகுதியில் மலையக பெருந்தோட்ட தமிழர்கள் எனவும் யாழ்ப்பாண தமிழர்கள் எனவும் இரண்டு பிரிவுகளாக பிரித்து யாழ்ப்பாண தமிழர்களுக்கு ஒரு விதமாகவும் மலையக பெருந்தோட்ட தமிழர்களுக்கு ஒரு விதமாக தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரியவருகின்றது.இது தொடர்பாக அண்மையில் ஒரு குழுவினர் நுவரெலியா பகுதியில் இருக்கின்ற ஒரு இராஜாங்க அமைச்சரையும் சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர்.
ஆலயங்களில் எந்தவிதமான பாகுபாடுகளும் இன்றி பூஜைகளும் ஏனைய விடயங்களும் நடைபெற வேண்டும் என்பதே நடைமுறை. ஆனால் குறித்த ஆலயத்தின் நிர்வாகம் ஏன் இவ்வாறு செயற்படுகின்றது என்பது கேள்விக்குறியே?தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டிய இந்த காலகட்டத்தில் இவ்வாறான செயற்பாடுகளால் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
இது மாத்திரமன்றி இந்த ஆலயத்தின் ஒரு பகுதியில் உல்லாச விடுதிகள் அமைக்கப்பட்டு அவை வாடகைக்கு விடப்படுகின்றன.இது ஆலயத்தின் தூய்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளால் சைவ மதத்தின் மீது வைத்திருக்க கூடிய நம்பிக்கை பலுதடைய சந்தர்ப்பம் உள்ளதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் இந்த ஆலய நிர்வாகம் முழுக்க முழுக்க வியாபார நோக்கத்துடனேயே செயற்படுவதாகவும் அதற்கு பல உதாரணங்கள் இந்த ஆலயத்தின் வளாகத்தில் அமைந்திருப்பதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆலயத்தில் கோடிக்கணக்கான ரூபாய்கள் வருமானமாக பெறப்பட்டாலும் அவை இந்த பகுதிக்கு எந்த விதத்திலும் பிரயோசனமடைவதாக தெரியவில்லை.இங்குள்ள மக்களுக்கு இதன் மூலம் எதுவித பயனும் இல்லை எனவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
பெருந்தோட்ட பொது மக்கள் தங்களுடைய ஆலய வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.அதாவது பஜனை காலங்களில் அங்கு அதனை முன்னெடுப்பதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை.மேலும் பெருந்தோட்ட பகுதியை பிரதிநிதித்துவம் செய்த இந்த ஆலயத்தின் அனைத்து ஆயுள் கால உறுப்பினர்களுக்கும் எந்தவிதமான அறிவித்தலோ அல்லது எந்தவிதமான விடயங்கள் தொடர்பாகவும் அறிவிக்கப்படுவதில்லை எனவும் ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத ஆயுள் கால உறுப்பினர் தெரிவிக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பாக இந்த பகுதியை பிரதிநிதித்துவம் செய்கின்ற தலைவர்களும் மதத் தலைவர்களும் இணைந்து ஒரு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகவிரைவில் இந்த ஆலயம் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய ஒரு நிலை ஏற்படலாம் எனவும் அங்குள்ள பொது மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.குறித்த ஆலயமானது மதத்தை போதிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டாலும் தற்பொழுது அப்படியான எந்த ஒரு நிகழ்வும் அங்கு இடம்பெறுவதில்லை.இந்த ஆலயம் பிரபலமான ஒரு அமைப்பினரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கான நடவடிக்கைகளை உரிய தரப்பினர் எடுப்பார்களா?
நுவரெலியா நிருபர்