உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் நாடாளுமன்ற சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு எதிராக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக, ஊழல் எதிர்ப்புக் குரல் ஒருங்கமைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
தேசிய நூலகக் கேட்போர் கூடத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
‘உரிய கல்வித் தகைமையற்றவர்கள் 62 பேருக்கு, அமைச்சரின் ஆலோசனைக் குழுவில் இடங்கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, அவர்களுக்கான சம்பளமானது, நாட்டின் அபிவிருத்தித் திட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதியினை, தனது அமைச்சின் தொலைபேசிக் கட்டணம், மின்கட்டணம் என்பவற்றைச் செலுத்தப் பயன்படுத்தியுள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன.
இவை தொடர்பில், அவருக்கு எதிராக வருகின்ற வாரத்தில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யவுள்ளோம்’ எனத் தெரிவித்தார்.