மலையக மக்களின் அடிமைச்சின்னங்களென சொல்லப்படுகின்ற லயங்கள்(வரிசை வீடுகள்)தகர்த்தெறிந்து சொந்தக்காணியில் தனித்தனிவீடுகளில் வாழ்வதற்கான சூழல் ஏற்படவேண்டுமென்ற குரல் ஓங்கிஒலித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் லயத்தை விட்டுவெளியேறமாட்டோமென்று அடம்பிடிப்பது எந்த வகையில் பொருத்தமானதென்று தெரியவில்லை இவ்வாறு ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மலையக பிராந்திய பொறுப்பாளர் இரா.ஜீவன் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் மலையக பெருந்தோட்டபுரங்களில் கல்வி வளர்ச்சிக்கும் சுகாதார மேம்பாட்டுக்கும் சமூகபொருளாதார மாற்றத்திற்கும் பெரும்தடையாக இருப்பது இந்த லயத்துமுறையே ஆகும் மலையக மக்கள்நிலவுடமையுடன் கூடிய சொந்தவீட்டில் வாழவேண்டுமென்ற கோரிக்கை சமூகபற்றாளர்களால் மிக நீண்டகாலமாகவே முன்வைக்கப்பட்டுவருகின்றன.
அந்தவகையில் அமரர் சந்திரசேகரன் அவர்களால் முதன் முதலில் பெருந்தோட்டங்களில் தனிவீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது அவரின் மறைவுக்கு பின் கிடப்பில் போடப்பட்ட மேற்படி திட்டம் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களினால் தற்போது மீண்டும் சற்றுவேகமாகமுன்னெடுக்கப்படுகின்றன அதில் ஒருகட்டமாக அக்கரைப்பத்தனை ஊட்டுவள்ளிதோட்டத்தில் வெள்ளைக்கார காலத்து லயங்கள் தகர்க்கப்பட்டு சகலருக்கும் தனித்தனி வீடமைத்து அந்தோட்டத்தை கிராமமயப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அதற்கு எதிராக சிலர் லயங்களிலிருந்து வெளியேற மறுப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது மலையக பெருந்தோட்ட மக்களின் சமூகமாற்றத்தில் அக்கறையுடன் செயற்படும் தரப்பினரை விசனமடையசெய்துள்ளது
ஆகவே மக்கள் அரசியல் சூழ்ச்சிகளுக்கு பலியாகமல் தோட்டங்களை கிராமங்களாக மாற்றுவதற்கும் அடிமைச்சின்னங்களான லயங்கள் தகர்த்தெறியவதற்கும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
அதே போல் இந்த கிராமமயப்படுத்தும் திட்டத்தால் அங்கு வாழும் மக்கள் நூற்றாண்டு காலமாக பயன்படுத்தும் வீட்டுத்தோட்டங்கள்,கால்நடைவளர்ப்பு தொழுவங்கள்(பட்டிகள்) புற்காணிகள் என்பன பறிமுதல்செய்யப்பட்டுவிடுமா என்ற மக்களின் நியாயமான அச்சத்தை போக்கவேண்டியதும் சம்பந்தப்பட்டவர்களின் கடமையாகும் எனவும் குறிப்பிட்டார்