அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 3 பேர் படுங்காயம்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து 12.06.2018 அன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.தலவாக்கலை பகுதியிலிருந்து லிந்துலை மட்டுக்கலை பிரதேசத்திற்கு சென்ற முச்சக்கரவண்டியே இவ்வாறு குறித்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க தன்மை ஏற்பட்டதன் காரணமாக இவ்விபத்து நேர்ந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
காயடைந்தவர்களில் முச்சக்கரவண்டி ஓட்டுனர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதில் பயணஞ் செய்த கணவன், மனைவி இருவரும் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)