வங்கியில் வைப்பிலிட்ட 13 லட்சம் பணம் மாயமான சம்பவம் – விசாரணையில் வெளியான தகவல்கள்! பொகவந்தலாவையில் சம்பவம்

0
85

குவைட்டில் இரண்டு வருடங்களாக பணிப்பெண்ணாக பணியாற்றி அரச வங்கியில் வைப்பிலிட்ட 13, 44, 000 (பதின்மூன்று இலட்சத்து நாற்பத்தி நான்காயிரம்) ரூபாய் பணம் மாயமான சம்பவம் பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உரிய வங்கிக்கணக்கில் இடம்பெற்றுள்ளது.

நோர்வூட், பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்பட கீழ் பிரிவை சேர்ந்த நித்தியஜோதியம்மா சுந்தரலிங்கம் என்பவருக்குச் சொந்தமான பணமே இவ்வாறு மாயமாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குடும்ப வறுமைக்காரணமாக 2022 ஆம் ஆண்டு வெளிநாட்டிற்கு வீட்டுப்பணிப்பெண்ணாக வேலைக்குச் சென்ற இப்பெண் (நித்தியஜோதியம்மா சுந்தரலிங்கம்) , தனது மாதாந்த சம்பளத்தை அரச வங்கியொன்றில் வைப்பு செய்துள்ளார்.

இரண்டு வருடங்கள் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு 2024 ஏப்ரல் 28 ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார். இரண்டு நாட்கள் கழித்து ஏப்ரல் 30 ஆம் திகதியன்று குறித்த வங்கிக்குச் சென்று பணத்தை மீளப்பெறுவதற்கான சிலிப்பை நிரப்பி கொடுத்துள்ளார்.

சிலிப்பில் எழுதப்பட்டுள்ள பெருந்தொகை பணம், கணக்கில் மீதமில்லை என்றும், வங்கிக்கணக்கில் 1,046 ரூபாய் மாத்திரமே இருப்பதாக கருமபீடத்தில் கடமையில் இருந்த வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார்.

இரண்டு வருடங்களாக வீட்டு வேலைச் செய்து சம்பளமாகக் கிடைத்த 13 இலட்சத்து 44 ஆயிரத்து 858 ரூபாய் பணம் வங்கிக் கணக்கிலிருந்து சிறுச்சிறுக மீள பெற்றுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“நான், வெளிநாட்டில் இருக்கும் போது, இங்கு பணத்தை என்னால் எவ்வாறு எடுக்க முடியும்? என குறித்த பெண், வங்கி அதிகாரிகளுடன் முரண்பட்டுள்ளார். தனக்கு உரிய பதில் கிடைக்காமையால், ஹட்டன் நகரில் பஸ்ஸில் பாய்ந்து தன்னுயிரை மாய்க்கவும் முயற்சித்துள்ளார்.

எனினும், அப்பெண்ணை காப்பாறியவர்கள் விடயத்தை கேள்வியுற்று, ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸ் விசாரணை பிரிவுக்கு அனுப்பிவைத்துள்ளனர். அங்கு அப்பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது வங்கிக்கணக்கு விபரங்களை குறித்த வங்கியில் இருந்து பெற்று பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். அதற்காக, அந்த வங்கிக்கு 2,400 ரூபாயை கட்டணமாக செலுத்தியும் உள்ளார்.

விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், வங்கியின் சிசிரிவி கமெரா காணொளியில் குறித்த பெண்மணியின் சாயலை ஒத்த பெண்ணொருவர் பணத்தை மீளப்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நித்தியஜோதியம்மா வெளிநாட்டுக்குச் செல்வதற்கு முன்னர், தனது அயல் வீட்டு பெண்ணிடம் தனது தேசிய அடையாள அட்டையையும், வங்கி புத்தகத்தையும் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார்.

நாட்டுக்குத் திரும்பியதன் பின்னர், அவ்விரண்டு ஆவணங்களையும் குறித்த பெண்ணிடம் கேட்ட போது ஆள் அடையாள அட்டையை மாத்திரம் திரும்ப கொடுத்த அயல்வீட்டு பெண், வங்கிப்புத்தகம் காணாமற் போய்விட்டதாக தெரிவித்தும் உள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்மணியே ஆள் மாறாட்டம் செய்து குறித்த வங்கிக்கணக்கிலிருந்து பணத்தை மீளப் பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அத்துடன், நாவலப்பிட்டி, டிக்கோயா, ஹட்டன் பகுதிகளிலுள்ள வங்கிக்கிளைகளிலேயே பணத்தை மீளப்பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய வங்கியின் அதிகாரியொருவர் இது குறித்து தெரிவிக்கையில், நித்தியஜோதியமா என்பவரின் ஆள் அடையாள அட்டையில், படம் தெளிவில்லை. அடையாள அட்டையிலுள்ள படத்தின் சாயலை கொண்ட பெண்ணொருவர் வங்கிக்கணக்கு புத்தகத்தில் இட்டுள்ளவாறே கையொப்பமிட்டு பணம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

குடும்ப வறுமை காரணமாக வெளிநாட்டுக்குச் சென்று, கஸ்டப்பட்டு சிறுகசிறுக சேமித்த பணத்தை, சரியான ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தாமல், வங்கி அதிகாரிகள் வேறு ஒருவரிடம் அதிகாரிகள் எப்படி கொடுக்க முடியுமென கேள்வியெழுப்பிய நித்தியஜோதியமா, எனது வங்கிக்கணக்கில் வைப்பிலிட்ட பணம் முழுவதும் தனக்கு வேண்டுமென கோரியுள்ளார்.

முறைப்பாடு தொர்பில், ஹட்டன் குறத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், ஆள் அடையாள அட்டை மற்றும் வங்கிப்புத்தகத்தை கையளித்த அயல் வீட்டுப்பெண்ணிடமும் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

நித்தியஜோதியம்மா சுந்தரலிங்கத்துக்கு எல்பட கீழ் பிரிவில், ஒரே லயத்தில், அடுத்தடுத்து இரண்டு வீடுகள் உள்ளன. அதில் ஒரு வீட்டை, பக்கத்து வீட்டு பெண்ணுக்கு எழுதி கொடுத்துள்ளார். அந்தப் பெண், எல்பட மேற்பிரிவைச் சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்துள்ளார். எனினும், கணவனின் வீட்டுக்குச் செல்லாமல், கீழ் பிரிவிலேயே வசித்துவகின்றார். அவ்வாறு வீட்​டை எழுதி கொடுத்தபோது, பரிமாற்றப்பட்ட ஆவணத்தில் நித்தியஜோதியம்மா சுந்தரலிங்கம் என்ற பெண்ணே கையொப்பம் இட்டுள்ளார். அந்த கையொப்பத்தை இட்டு, இட்டு நன்றாக கையொப்பமிட்டு பழகியதன் பின்னரே பக்கத்துவீட்டுப் பெண், பணத்தை வங்கியில் இருந்து மீளப்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

பணத்தை மீள எடுத்ததாக கூறப்படும் அந்த பெண், தன்னுடைய தாய், தந்தை மற்றும் பிள்ளைகளுடன், சிறிய நகரங்களில் உள்ள வங்கிக்குச் சென்றே, யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் இவ்வாறான மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here