இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 21 தமிழக மீனவர்கள் இன்று வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் வட கடற்பகுதியிலும், யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிலும் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.
இதற்கமைய மன்னார் கடற்பரப்பில் 16 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் பயணித்த மூன்று ரோலர் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேபோன்று யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து மூன்று தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த ஒரு ரோலர் படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் தமிழகம் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படை கூறியுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று பகல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை கடந்த ஒருவாரத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் வடபகுதி கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.