வடமாகாணசபையை ஒற்றுமையுடன் வழி நடத்துங்கள்; செந்தில் தொண்டமான் வேண்டுகோள்!

0
128

தற்போது வடமாகாண சபையில் நிலவி வரும் குழப்ப நிலை காரணமாக இலங்கையில் மட்டுமின்றி சர்வதேச ரீதியில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கவலையான சூழலை ஏற்படுத்தியுள்ளது என இ.தொ.கா உப தலைவரும் ஊவா மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமான் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
வடக்கினை சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு அறிவுரைகள் கூறும் அளவிற்கு எனக்கு அனுபவமும் இல்லை மற்றும் அறிவுரை கூறும் அளவிற்கு வயது இல்லை. இருப்பினும் மலையக மக்களின் பிரதிநிதி என்ற வகையில் மலையக மக்களின் கருத்தினை வெளிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளேன். 1987ம் ஆண்டு ஜூலை மாதம் 29ம் திகதி கையெழுத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் படி அதே ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி இலங்கை பாராளுமன்றம் தனது அரசியல் அமைப்பில் 13வது திருத்தச்சட்டம் மற்றும் மாகாண சபை சட்டத்தின் இல.42 கீழ் அறிவிக்கப்பட்டு 1988 பெப்ரவரி 03ம் திகதி ஒன்பது மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. அதனடிப்படையில் 1988ம் ஆண்டு செப்டம்பர் 2ம் திகதி வடக்கு கிழக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்ட்டது. அதன் பின் வடக்கு கிழக்கு மாகாண சபை தனித்தனியாக பிரிக்கபட்டு பல வருடமாக வடமாகாண சபைக்கு தேர்தல் நடாத்தாமல் இருந்து வந்தது.

அவ்வாறு இருக்கும் வேளையில், 2009ம் ஆண்டிற்கு பிறகு வடமாகாண சபைக்கு தேர்தல் நடாத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் உட்பட சர்வதேச அழுத்தத்தின் பேரில், இலங்கை அரசாங்கத்திற்கு தேர்தல் நடாத்த வேண்டும் என்ற ஒரு நெருக்கடி ஏற்பட்டதையடுத்து வடமாகாண சபைக்கு என தனியாக 2013ம் ஆண்டு செப்டம்பர் 21ம் திகதி தேர்தல் நடாத்தப்பட்டது. அத்தேர்தலில் அதிகளவிலான வாக்குகளினால்; வெற்றிப்பெற்று வடக்கின் முதலமைச்சராக விக்ணேஷ்வரன்; தெரிவுச்செய்யப்பட்டது மட்டுமின்றி முதலமைச்சர் விக்ணேஷ்வரன் தலையமையில் வட மாகாண சபை செயற்பட என மக்கள் மற்றும் வட மாகாண சபையின் ஆளும் கட்சியினர் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு செயற்படக்கூடிய ஒரு மாகாண சபையாக காணப்பட்டது. அதனடிப்படையில் வடக்கு மக்களின் பிரதிநிதியாக அவர்களின் குறைகளின் நீக்கி மக்களின் நலன் கருதியே முதலமைச்சர் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வாறான நிலையில் தற்போது முதல் தடவiயாக இவ்வாறானதொரு குழப்ப சூழல் ஏற்பட்டுள்ளமை ஏனைய சமூகத்தினர் நம்மை விமர்சிப்பதற்கு நாமே வழிக்காட்டடியாக இருப்பது போல் அமைந்துள்ளது.

ஊழல் இல்லாத ஒரு ஆட்சியினை வழங்க வேண்டும் என முதலமைச்சர் நினைப்பது அனைவரும் விரும்பக்; கூடிய ஒரு விடயம். நாமும்; ஊழலுக்கு எதிராக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றோம் என்பதில் எவ்வித மாற்று கருத்துமில்லை. அதனடிப்படையில் ஊழலுக்கு எதிராக முதலமைச்சர் விக்ணேஷ்வரன் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது வரவேற்க வேண்டிய ஒரு விடயமாகும். மக்கள் பிரதிநிதி என்ற வகையில் முதலமைச்சர்; இவ்வாறான நடவடிக்கை முன்னெடுப்பது வரவேற்கத்தக்க வேண்டிய ஒரு விடயமாகும். அதேவேளை இவ்வாறான ஊழல் நடவடிக்கைகள் நடைபெறாமல் இருப்பதற்கு அவர் இன்னும் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட்டிருக்க வேண்டும். ஒருவர் ஊழலில் ஈடுப்பட்டு இருப்பாராக இருந்தால் அதன் பொறுப்பும் அதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியதும் முதலமைச்சரின் கடமை. ஆனால் தற்போது அவருக்கு கீழுள்ள நான்கு அமைச்சர்கள்; ஊழல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார் என கருத்துக்கள் வெளிவரும் போது இது தொடர்பாக முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும் என்பது எனது கருத்தாகும்.

வடக்கு முதலமைச்சர் விக்ணேஷ்வரன் திறமையாக செயலாற்றும் ஒரு முதலமைச்சர் எனவும் அவரது சிறந்த நிர்வாகம் தொடர்பாகவும் என்னுடன் பணிபுரியும் மாகாண சபை உறுப்பினர்களுடன் பல முறை கலந்துரையாடியுள்ளேன்;

வடக்கில் மக்கள் எப்போதும் கருத்து வேறுபாடின்றி ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்பதே மலையக மக்கள் மட்டுமின்றி அனைத்து தமிழர்களின் விருப்பமாகும். வடக்கு அரசியல்வாதிகள் தொடர்பாக நாம் எப்போது கருத்து தெரிவிப்பதோ அல்லது விமர்சிப்பதோ கிடையாது. ஏனெனில் அவர்கள் மிகவும் அனுபவிமிக்கவர்கள். ஆகவே அவர்கள் சிறுபான்மை மக்கள் வாழும் மாகாணங்களுக்கு மட்டுமின்றி பெரும்பான்மை மக்கள் வாழும் மாகாணங்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகவும் முன் உதாரணமாகவும் செயற்படவேண்டும் என்பதே எனது அவாவாகும்.

கடந்த காலங்களில் வட மாகாண ஆளுநரின் இடையூறு காரணமாக மாகாண சபை சுதந்திரமாக செயற்படக்கூடிய சூழல் காணப்பட்டது. ஆகவே, தற்போதைய ஆளுநர் சுதந்திரமாக செயற்படுவதற்கு முழுமயான ஒத்துழைப்பு வழங்கியுள்ளார் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்றாகும். 29 வருடமாக செயற்படாது காணப்பட்ட வட மாகாண சபை தற்போது நான்கு வருடங்களாகவே செயற்பட ஆரம்பித்துள்ளது. அச்சூழ்நிலையில் வடக்கு மக்களுக்கு கடந்த 29 வருடகாலமாக முன்னெடுக்காத வேலைத்திட்டங்களை தற்போது எவ்வாறு முன்னெடுப்பது என்பதற்கான வழிமுறைகளை சிந்தித்து அதனை முன்னெடுப்பதைவிடுத்து இவ்வாறான சுயநலம் கருதி ஊழல் போன்ற கீழ் தரமான செயற்பாடுகளில் ஈடுபடுவதினை கட்டாயமாக தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பது எனது வேண்டுக்கோள் என்பதோடு, இலங்கையிலேயே சிறந்த மாகாணமாக வடக்கு மாகாணம் செயற்பட வேண்டும் என எதிர்ப்பார்ப்பதில் நானும் ஒருவன் என்பதினை தெரிவித்துக்கொள்கின்றேன் என மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சின் ஊடகப்பிரிவு
எஸ்.பிரபாகர்
077 – 1683858

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here