வடமாகாணசபை விவகாரம் தொடர்பில் முதல்வரின் நகர்வு சரியானது என்கிறார்; அமைச்சர் மனோ கணேசன்!

0
105

இலங்கையில் மிகவும் பிரபல மாகாணசபைகள், வட மாகாணசபையும், கிழக்கு மாகாணசபையும் ஆகும். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்நாட்டில் அதிகாரப்பகிர்வு கோரி போராடியது, தமிழர்களாகும். அகிம்சா போராட்டம், ஆயுத போராட்டம் இரண்டையும் முன்னெடுத்து பெரும் துன்பங்களுக்கு முகங்கொடுத்தவர்கள், தமிழர்கள் ஆகும். ஆகவே அதிகாரப்பகிர்வின் ஒரு கட்டமாக மாகாணசபைகளை வழங்கப்பட்ட போது, உருவாகிய நிலைமையை அரசியல்ரீதியாக சமாளிக்கவே ஏனைய ஏழு மாகாணங்களுக்குமாக இந்த முறைமையை ஜனாதிபதி ஜேஆரும், பிரதமர் ராஜீவும் தந்தார்கள். ஆகவே இன்று தெற்கில் இருக்கின்ற மாகாணசபைகள் சும்மா கிடைத்தவை ஆகும். ஆனால் வடக்கில், கிழக்கில் அவை சும்மா கிடைக்கவில்லை என்பதை பொறுப்புகளில் உள்ளோர் உணர வேண்டும். இவற்றின் பின்னால், தமிழ் மக்களின் பெரும் தியாக வரலாறு இருக்கின்றது என்பதை அனைவரும் உணர வேண்டும். இதுதான் உண்மை. ஆகவே, ஏனைய மாகாணசபைகளில், குழப்பம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் இல்லையா? என்று கேள்வி கேட்டு வடக்கில், கிழக்கில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு எவரும் சப்பை கட்டு கட்ட முடியாது.

எனவே இன்று இந்த விவகாரம் தொடர்பில் முதல்வர் விக்கினேஸ்வரன் ஒரு விசாரணை குழுவை நியமித்து அறிக்கையை பெற்று நடவடிக்கை எடுத்துள்ளது, நல்ல முற்போக்கான நடவடிக்கையாகும். தனி ஒரு நாட்டை கோரிய உங்களுக்கு, ஒரு மாகாணசபையையே பரிபாலிக்க முடியவில்லையா என தெற்கில் எழும் கூச்சலுக்கு உரிய பதிலை தரும் பொறுப்பு முதல்வரிடம் இருக்கின்றது. கிடைக்கப்பெற்றுள்ள அறிக்கையின் பிரகாரம் காரியங்களை முன்னெடுக்க அவருக்கு அவர் வணங்கும் தெய்வம் அருள் பாலிக்கட்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ மேலும் கூறியதாவது,

இது பற்றி நான் பேசுவது, மத்திய அரசு அமைச்சர் என்ற உரிமையில் மாத்திரம் அல்ல. எனக்கு இதில் விசேட தார்மீக காரணங்களும் உள்ளன. ஒன்று, மகிந்த ஆட்சியில், அவர் வடக்கு தேர்தலை நடத்தாமல், காலம் தள்ளிக்கொண்டே போன போது, அதை நடத்த வேண்டும் என்று இங்கிருந்து அழுத்தமாக போராடியவர்களில் நான் ஒரு முன்னணியாளன். அடுத்தது, விக்னேஸ்வரன் அவர்களை முதல்வர் வேட்பாளராக போட்டியிட சம்மதிக்க வைத்தவர்களில் நானும் ஒரு முன்னணியாளன். அடுத்தது, முதல்வர் விக்னேஸ்வரன், தமிழரசு தலைவர் மாவை, எம்பி சிறிதரன் ஆகிய நண்பர்களின் அழைப்பை ஏற்று நான் என் கட்சி பணியாளர்களையும் அழைத்துக்கொண்டு, வடக்கு சென்று, ஒரு வாரத்துக்கு மேல் முகாமிட்டு, கிளிநொச்சி, யாழ், வன்னி மாவட்டங்களில், கூட்டமைப்பின் வெற்றிக்காக வடமாகாணசபை தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக ஈடுபட்டேன். இவை இன்று பலருக்கு மறந்து விட்டாலும், அவை அசைக்க முடியாத உண்மைகளாகும்.

குறிப்பாக, இன்று சர்ச்சையில் இருக்கின்ற கல்வி அமைச்சர் குருகுலராஜா மற்றும் அவருடன் சேர்ந்து போட்டியிட இன்னும் இரண்டு உறுப்பினர்களின் வெற்றிகளை கிளிநொச்சியில் உறுதிப்படுத்துவதில் எங்கள் பிரச்சாரம் பாரிய பங்கை வகித்தது. அந்நேரம் என்னை இன்முகத்துடன் கையெடுத்து வணங்கி கூட்டங்களுக்கு அழைத்து போன அமைச்சர் குருகுலராஜா, தேர்தலுக்கு பிறகு இடைநாட்களில் கிளிநொச்சி மற்றும் வடக்குக்கு நான் சென்ற போது என்னை யார் என்றே தெரியாதவர் போல் நடந்துக்கொண்டார். வடமாகாணசபை பாடசாலைகள் விவகாரங்கள் தொடர்பில், நான் அவருக்கு அனுப்பி வைத்த, எனை நாடி வசந்து உதவி கோரிய வடக்கில் வாழும் ஆசிரியர்கள் மாறும் பொதுமக்கள் பலரின் கோரிக்கை கடிதங்களையும் புறக்கணித்தார்.

எனினும் நான் தேர்தல் காலங்களில் அங்கே போனது அவரை அறிந்து அல்ல. மாறாக என் நண்பர் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அழைப்பை ஏற்றே நாம் சென்றோம். மேலும் நீண்டகாலமாக சொல்லோணா துன்பங்களில் உழன்ற வடக்கு வாழ் உடன்பிறப்புகளின் வாழ்வுதனில் உண்மையான வசந்தம் வீச வேண்டும் என்ற ஆதங்கத்தின் காரணமாகவே என்பதையும் கூறியாக வேண்டும். ஆகவே எனக்கு இதுபற்றி பேச எனக்கு. எனது அமைச்சு அதிகார உரிமையைவிட தார்மீக உரிமை அதிகமாக இருக்கின்றது என்பதை வடமாகாணசபை அறிந்துகொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here