கனடாவின் நோர்த் யோர்க் North York பகுதியில் உள்ள பிரபல வணிக வளாகம் ஒன்றின் நகரும் படிக்கட்டில் (Escalator) இருந்து கீழே விழுந்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வியாழக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக Toronto Police தெரிவித்துள்ளனர்.
மாலை 5:00 மணியளவுக்கு RioCan Empress Walk வணிக வளாகத்தில் உள்ள நகரும் படிக்கட்டில் இருந்து நபர் ஒருவர் விழுந்துள்ளதாக அவசர உதவிப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு அவசர மருத்துவப் பிரிவினர் விரைந்து சென்றபோதிலும், குறித்த நபர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வணிக வளாகத்தில் இருந்த பொது மக்கள் வெளியேற்றப்பட்டு, வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
உயிரிழந்த நபர் அந்த நகரும் படிக்கட்டில் எவ்வித பராமரிப்புப் பணிகளிலும் ஈடுபடவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் எவ்வித குற்றவியல் பின்னணியும் (Criminal matter) இல்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை தொழிலாளர் அமைச்சிடம் (Ministry of Labour) ஒப்படைத்துள்ளனர்.
இவ்விசாரணைக்கு தாங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாக RioCan நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




