வன்முறையைத் தடுக்க வன்முறை கலாசாரமே தீர்வாகாது நேற்றைய சிறுவர்களே இன்றைய இளைஞர்கள் – திலகர் எம்பி!!

0
134

சிறுவர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்கப்படல் வேண்டும் என்ற அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. விடுதலைப்புலிகள் காலத்தில் கோரிக்கைகள் எதுவானபோதும் அப்போது வன்முறை கலாசாரம் ஒன்றே வடக்கில் இருந்தது. அப்போது சிறுவர்களாக இருந்தவர்களே இன்று இறைஞர்களாகி வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

காரணம் அவர்கள் வன்முறை சூழலிலேயே பிறந்து வளர்ந்தவர்களாக உள்ளனர். நேற்றைய சிறுவர்களே இன்றைய இளைஞர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். எனவே இப்போதைய வன்முறையைத் தடுக்க முன்னைய வன்முறை கலாசாரமே தீர்வாகாது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் இணைப்பு உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் உள்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் மலையகப் பெருந்தோட்ட பகுதி சிறுவர்களுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் சத்துணவுத்திட்டமான ‘ நியுட்ரிபார்’ உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு பரிசோதனை நோக்கிலான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மேற்படி கருத்தினைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் என்பதே நாம் வழமையாக கூறிவரும் கூற்று. நானும் பெருந்தோட்டத்தில் சிறுவனாக பிறந்து வளர்ந்தவன் என்றவகையில் இப்போது நாங்கள் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அதிக கவனம் எடுத்து வருகிறோம். அதில் முதலாவது பெருந்தோட்டசுகாதார துறையை அரச மயமாக்குவது. அதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல பிள்ளைப் பராமரிப்பு நிலையங்களை ‘சிறுவர் அபிவிருத்தி நிலையங்களாக’ மாற்றிவருகின்றோம். இவை முன்னெடுக்கப்பட்டுவரும் அதேநேரம் அனைத்து பெருந்தோட்ட மாவட்டங்களையும் சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் ஊடாக சத்துணவு பிஸ்கட்களை வழங்கும் நடவடிக்களை மேற்கொண்டு வருகிறோம். வாரத்திற்கு மூன்று நாட்கள் என்ற அடிப்படையில் 3-5 வரையான குழந்தைகளுக்கு மாதாந்தம் 250000 பிஸகட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அவை தயாரிக்கப்படும் தொழிற்சாலை உரிய தரத்தில் இயங்குகின்றதா என்பதை கண்காணிக்கும் விஜயமே இன்று என்னால் மேற்கொள்ளப்பட்டது. எதிர்வரும் காலத்தில் வேறு துறை சார் அமைச்சுக்களின் உதவியையும் பெற்று இத்தகைய தொழிற்சாலைகளை மலையகப் பகுதிகளில் அமைக்கவும் நாம் திட்டமிட்டு வருகின்றோம்.

இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் என்பதுபோலவே நேற்றைய சிறுவர்களே இன்றைய இளைஞர்கள் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும். இன்று தவறும் செய்யும் இளைஞர்கள் நேற்று சிறுவர்களாக இருந்தபோது எந்தச் சூழலில் வளர்ந்தார்களோ அதுவே அவர்கள் இளைஞர்களாகும்போது அவர்களின் நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. முன்னையதாக வன்முறை கலாசார சூழலில் வளர்ந்தவர்கள் மீண்டும் வன்முறைக கலாசாரத்தைக் கொண்டே அடக்க வேண்டும் என்ற ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கூற்று ஏற்புடையது அல்ல. வன்முறையைத் தடுக்க வன்முறை கலாசாரமே தீர்வாகாது.விடுதலைப் புலிகள் காலத்தில் வளர்த்தெடுக்கப்பட்டது வன்முறை கலாசாரம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

அமைச்சரது ஆதங்க கருத்து தெற்கில் அரசியல் லாப நோக்கில் பயன்படுத்தப்படுகின்றது. அவர்கள் யாரென்றால் அவர்கள்தான் ஹிட்லர் போன்று செயற்பட்டு நாட்டை வளர்க்கவேண்டும் என சொன்னார்கள். அவர்களுக்கு விஜயகலாவை விமர்சிக்கும் தார்மீகம் இல்லை. வடக்கிலோ தெற்கிலோ வன்முறை மூலம் எதிர்காலத்தை அமைக்க நினைக்கும் எவரது கருத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here