மத்திய மலைநாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினை தொடர்ந்து நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் என்றுமில்லாவாறு தாழிறங்கியுள்ளன. இதனால் நீருக்குள் மூழ்கிக்கிடந்த கட்டடங்கள் மேலோங்கி காணப்படுகின்றன.
மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் நீர் தாழிறங்கியதனை தொடர்ந்து பிரதேசத்திலுள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்திவருகின்றனர்.
இதுவரையில் மலையகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 63.5 சதவீதம் குறைவடைந்துள்ளன. தற்போது 36.5 சதவீத நீரே சேமிப்பில் உள்ளதாக மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதில் மவுசாகலை நீர்தேக்கத்தில் 62.5. சதவீதம் குறைவடைந்துள்ளன தற்போது 37.5 சதவீதமே எஞ்சியுள்ளன.
காசல்ரி நீர்தேக்கத்தில் 79.7 சதவீதம் குறைவடைந்துள்ளன இதில் தற்போது 20.3. சதவீத நீரே மிஞ்சியுள்ளன. கொத்மலை 71.9 நீர்தேக்கத்தில் இதுவரை குறைவடைந்துள்ளதாகவும் 28.1 சதவீத நீர் சேமிப்பில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் தாழிறங்க தொடங்கியதன் காரணமாக நீர் மூழ்கியிருந்த ஆலயங்கள், பள்ளிவாசல்கள், பௌத்த விகாரைகள் உள்ளிட்ட கட்டடங்கள் முழுமையாக தென்பட ஆரம்பித்துள்ளன.
குறித்த கட்டடங்களை பார்வையிடுவதற்காக பலர் பல பிரதேசங்களிலிருந்து; வருகை தருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
நீரேந்தும் பிரதேசங்களில் மேலும் வரட்சியான காலநிலை நிலவும் பட்சத்தில் பாரிய நீர்த்தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் இதனால் நீர் மின் உற்பத்தியும் பாரிய அளவில் பாதிப்படையலாம் என மின்சாரதுறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த வரட்சியான காலப்பகுதியில் பொது மக்கள் நீரினை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் மின்வெட்டு மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஆகியன ஏற்படுவதனை தவிர்த்து கொள்ளலாம் என பலரும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மலைவாஞ்ஞன்