வரிசைக்குள் புகுந்து பெற்றோல் பெறுவதற்கு முயற்சி அட்டனில் அமைதியின்மை

அட்டன் நகரில் எம்.ஆர். நகர் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில் இன்று (23.06.2022) பதற்ற நிலை ஏற்பட்டது. எனினும், பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு 3 நாட்களுக்கு பின்னர் இன்றைய தினமே பெற்றோல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று காலை முதல் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.

பெற்றோலை பெறுவதற்கு பலர் இரவு – பகலாக வரிசைகளில் காத்திருந்த நிலையில், இன்று திடீரென வெளி இடங்களில் இருந்து வந்தவர்கள் வரிசைக்குள் புகுந்து பெற்றோல் பெறுவதற்கு முயற்சித்துள்ளனர்.

இதனால் வரிசைகளில் காத்திருந்தவர்கள் கடுப்பானார்கள். திடீரென வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அமைதியின்மை ஏற்பட்டது. எரிபொருள் விநியோகம் தடைபடும் அபாயமும் ஏற்பட்டது.

எனினும், பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து நிலைமையை கட்டுப்படுத்தினர். பின்னர் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றது.

 

(க.கிஷாந்தன்)