வாகனங்கள் இன்மையால் வாக்கு பெட்டிகளை கொண்டு செல்வதில் சிரமம் – நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவிப்பு!!

0
112

10.02.2018 அன்று நடைபெறும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. 504 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லல் மற்றும் அதிகாரிகளை அனுப்பும் பணிகள் 100 வீதம் பூர்த்தியாகியுள்ளது என நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவித்தார்.தேர்தல் தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் வைத்து 09.02.2018 அன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நுவரெலியா மாவட்டத்தின் பல வாக்களிப்பு நிலையங்களுக்கு வேன் போன்ற வாகனங்களை ஈடுபடுத்த முடியாமலிருக்கிறது. அங்குள்ள வீதிகளின் நிலை காரணமாக கெப் மற்றும் ஜீப் வண்டிகளை ஈடுபடுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

அதனால் குறித்த வாகனங்களுக்கான தட்டுப்பாடு உள்ளது. கொழும்பில் நாங்கள் கோரியிருந்த போதிலும் தேவையான வாகனங்கள் வழங்கப்படாத காரணத்தினால் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளையும், அதிகாரிகளையும் அழைத்துச் செல்லும் பணி சற்று தாமதமாகியது.

சில அரச நிறுவனங்களில் இருந்து வாகனங்கள் வரும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், எமக்கு அவை கிடைக்கவில்லை. இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளோம். எதிர்வரும் தேர்தல்களில் இவ்வாறான நிலை ஏற்படாத வகையில் தாமதமின்றி பணிகளை செய்ய எதிர்பார்க்கின்றோம்.

விசேடமாக 1 மாநகர சபை, 2 நகர சபைகள், 9 பிரதேச சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளதோடு 504 வாக்களிப்பு நிலையங்கள் உள்ளன. இவற்றில் 490 நிலையங்களில் வாக்குகள் எண்ணும் பணிகள் இடம்பெறும். இறுதி முடிவுகளை அறிவிக்கும் நிலையங்களாக 160 உள்ளன.

இரவு 8 – 9 மணியளவில் முடிவுகளை பெற்று நள்ளிரவு 12 மணியாகும் போது அவற்றை வெளியிட எதிர்பார்க்கின்றோம். நுவரெலியா மாவட்டத்தில் பாரியளவான வன்முறைச் சம்பவங்கள் இதுவரை பதிவாகவில்லை. எனவே 09.02.2018 அன்றும், 10.02.2018 அன்றும் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறாது என நம்புகிறோம்.

வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகள் எண்ணும் போது அங்கு ஒரு வாக்குப் பெட்டியையே எண்ணுவதற்கு ஈடுபடுத்துவோம். மாலை 6 மணியாகும்போது வாக்குகள் எண்ணும் பணிகளை ஆரம்பிக்கமுடியும். அவற்றுக்கான பாதுகாப்பை பொலிஸார் உறுதிப்படுத்துகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கையில் இருவர் என்ற வீதம் வாக்குகள் எண்ணும் இடத்தில் பாதுகாப்புக்காக ஈடுப்படுத்தியுள்ளோம். விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரது உதவிகள் தேவைப்படும் போது பெறப்படும் என்றார்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here