முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா ஓட்டிச் சென்ற ஜீப் வண்டி 2011 ஆம் ஆண்டு செட்டிக்குளம் பிரதேசத்தில் விபத்திற்கு உள்ளானத்தில் அதில் பயணித்த அமைச்சரவை பாதுகாப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தாக்கல் செயயப்பட்ட பீ அறிக்கை போலியானது என தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்ட அதிகாரியே வாகனத்தை ஓட்டிச் சென்றதாக கூறி வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பீ அறிக்கை, அப்போது செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இருந்த பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவவின் கையெழுத்தை போலியாக இட்டே தாக்கல் செய்யப்பட்டதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பீ. அறிக்கை வவுனியா பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலத்திலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிஸாருக்கு கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தம் காரணமாக போலியான பீ அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு அப்போது பொலிஸ் மா அதிபராக இருந்த மகிந்த பாலசூரிய உட்பட உயர் அதிகாரிகள் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விபத்து 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி மாலை 4.30 அளவில் நடந்துள்ளது.
ஸ்ரீரங்கா ஓட்டிச் சென்ற லேண்ட் க்றுசர் ரக ஜீப் வண்டி பதிவு செய்யப்படாத வாகனம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கி ஓட்டிச் சென்ற ஜீப் வண்டி வீதியை விட்டு விலகி, செட்டிக்குளம் வைத்தியசாலையின் மதில் சுவரில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஸ்ரீ ரங்காவின் பாதுகாப்புக்காக இணைக்கப்படடிருந்த அமைச்சரவை பாதுகாப்பு பிரிவை சேர்ந்த உறுப்பினர் உயிரிழந்தார்.
அன்றைய பொலிஸ் மா அதிபராக மகிந்த பாலசூரிய, ஸ்ரீ ரங்காவை காப்பாற்றுவதற்காக பொலிஸாருக்கு கடும் அழுத்தங்களை கொடுத்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஸ்ரீ ரங்கா வாகனத்தை ஓட்டிச் சென்றமைக்காக முக்கிய சாட்சியங்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.
எனினும் ஸ்ரீ ரங்காவிடம் விசாரணை நடத்திய போது தான் வாகனத்தை ஓட்டிச் செல்லவில்லை எனக் கூறியுள்ளார்.
விசாரணைகளில் மூலம் கிடைத்துள்ள அனைத்து சாட்சியங்களும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்த பின்னர் உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.