விஜயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக களமிறங்கிய அமைச்சர் மனோ!!

0
116

நல்லவர், வல்லவர் பிரபாகரனை அவரசரப்பட்டு கொன்று விட்டோம் என்று ஞானசாரர் என்னிடம் சொன்னார்- அவரை விட்டு விட்டு விஜயகலாவை பிடிப்பது ஏன் என்கிறார் அமைச்சர் மனோ

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நல்லவவர், வல்லவர், அவரை நாம் அவசரப்பட்டு கொன்று புதைத்து விட்டோம். உண்மையில் அவர் இன்னமும் உயிருடன் இருந்திருக்க வேண்டும். இன்று இந்நாட்டில் உள்ள பல பிரபல சிங்கள அரசியல் தலைவர்களை விட பிரபாகரன் சிறந்தவர். பிரபாகரன் கொண்ட கொள்கையில் நேர்மையாக இருந்தார். இன்றுள்ள பல சிங்கள அரசியல்வாதிகள், கொண்ட கொள்கைக்கும், நாட்டுக்கும் துரோகம் செய்பவர்கள் என்று சொன்னது யார்? மனோ கணேசனோ, விஜகலாவோ அல்ல.

இந்த கருத்தை பகிரங்கமாக ஊடகங்களின் முன் நேரடியாக என்னிடம் பொதுபல சேனை பொது செயலர் ஞானசார தேரர், என் அமைச்சுக்கு வந்து சொன்னார். இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் உடைந்து நொருங்கியுள்ள சட்டம், ஒழுங்கு நிலைமையை கண்டித்து ஒரு யாழ் மாவட்ட எம்பியாக, ஒரு தாயாக, ஒரு சகோதரியாக தன் கோபத்தை வெளிப்படுத்திய விஜகலா மகேஸ்வரனை மட்டும் பிடித்துக்கொண்டு விமர்சிப்பது ஏன்? புலிகள் இயக்கம் தடை செய்யபட்டுள்ளதால், அதைப்பற்றி விஜயகலா பேசுவது சட்டவிரோதம் என கூறலாம். அப்படியானால், அன்று ஞானசாரர் என்னிடம் கூறியதும் சட்ட விரோதம் அல்லவா?

உண்மையில் விஜயகலா தன் கருத்தை சொல்வதற்கு சரியான சொற்களை பயன்படுத்த தவறி இருக்கலாம். ஒரு ராஜாங்க அமைச்சரான அவரது கருத்தில் உரிய முதிர்ச்சி இல்லாமல் இருக்கலாம். ஆனால், விஜயகலாவின் கோபம் மிகவும் நியாயமானது. உண்மையில் யாழில் சட்டம் ஒழுங்கு உடைந்து நொறுங்கி போயுள்ளது. சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வல்லுறவுக்கு மனித மிருகங்களால் உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். நடைபெற்ற பாலியல் சம்பவங்கள் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன. நேற்று நாடு திரும்பிய நான், இன்று யாழ்ப்பாணம் சென்று நகரின் மத்தியில் நடு வீதியை மறைத்து அமர்ந்து முழுநாள் உபவாசம் செய்து, முழு நாட்டின் தேசிய அவதானத்தை யாழ் மாவட்டத்தில் இன்று முழுமையாக சீர் குலைந்து போயுள்ள சட்டம் ஒழுங்கு நிலைமையை நோக்கி கொண்டு வர விரும்பினேன். ஆனால், வேலைப்பளு காரணமாக நான் அதை செய்யவில்லை.

உண்மையில், இன்று யாழில் சட்டம், ஒழுங்கு சீரழிந்து உள்ளது என்பது அப்பட்டமான உண்மை. சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வல்லுறவுக்கு மனித மிருகங்களால் உள்ளாக்கபட்டுள்ளார்கள். இந்த மிருகங்களை இரும்பு கரம் கொண்டு அடக்க பொலிஸ் துறை தவறி விட்டது.

யாழ் மாவட்ட அரசியல் தலைவர்களும், தெருவில் இறங்கி தம் எதிர்ப்பை வெளிபடுத்தி ஒரு மக்கள் எதிர்ப்பு இயக்கத்தை நடத்தி இருக்க வேண்டும். பொலிஸ் செய்யட்டும் என பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. தொழிற்படாத பொலிசை தொழிற்பட வைக்க வேண்டும். இதன்மூலம் ராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் கருத்தை விட்டுவிட்டு, யாழ் மாவட்ட சட்டம், ஒழுங்கு சீரழிவே இன்று தேசிய பேசுபொருளாக மாறி இருக்க வேண்டும் என தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சரும், முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

யாழில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது. சிறுமிகள் முதல் வயதான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். போதை வஸ்து கலாச்சாரம் தலை விரித்து ஆடுகிறது. சினிமா பாணி வாள்வீச்சு நடக்கிறது. அரபு நாட்டு பாணியில் இந்த மனித மிருகங்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். சட்டம் ஒழுங்கை கட்டிக்காக்க வேண்டிய போலீஸ் தூங்குகிறது.

இதையிட்டு பேசும்போது ஆத்திரத்தில் விஜகலா மகேஸ்வரன் புலிகளை பற்றி பேசிவிட்டார் என இங்கே தென்னிலங்கையில் சிலர் வானுக்கும், தரைக்கும் குதிக்கிறார்கள். உண்மையில் விஜகலாவை பற்றி அல்ல, யாழில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்த நிலைமையை பற்றியே நாடு பேச வேண்டும்.

இதுபற்றி ஒரு கபினட் அமைச்சராக நான் வெட்கமடைகிறேன். எனினும் இது முழு அரசாங்கத்தின் குறைப்பாடு அல்ல. எம் உடலில் பல அங்கங்கள் இருக்கின்றன. சிலவேளை ஒரு கண் பார்வை மங்கலாக தெரியும். சிலவேளை ஒரு காலும், ஒரு கையும் ஒழுங்காக தொழிற்படாது. மற்ற, கண், கை, கால் ஒழுங்காக இருக்கும். அதுபோல், நம் அரசாங்கத்தில் ஏனைய பல விடயங்கள் நன்றாக இருக்கும் போது, சட்டம் ஒழுங்கு துறை சீராக இல்லை.

உண்மையில் நேற்று நாடு திரும்பிய நான், இன்று யாழ்ப்பாணம் சென்று நகரின் மத்தியில் நடு வீதியை மறைத்து அமர்ந்து முழுநாள் உபவாசம் செய்ய எண்ணினேன். அதன்மூலமாக முழு நாட்டின் தேசிய அவதானத்தை யாழ் மாவட்டத்தில் இன்று முழுமையாக சீர் குலைந்து போயுள்ள சட்டம் ஒழுங்கு நிலைமையை நோக்கி கொண்டு வர விரும்பினேன். ஆனால், வேலைப்பளு காரணமாக நான் அதை செய்யவில்லை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here