விஜேதாச ராஜபக்ச தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துகளை ஏற்க முடியாது அமைச்சர் மனோ கணேசன்!

0
145

அரச சார்பற்ற நிறுவனங்கள் என்ற சமூக அமைப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பௌத்த விகாரைகள் விவகாரங்களில் தலையிட முடியாது என்றும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, தொடர்ச்சியாக தெரிவித்து வரும் கருத்துகளை ஏற்க முடியாது. இந்த கருத்துகள் சிறுபான்மை மக்களையும், அரச சார்பற்ற நிறுவனங்களையும் நமது அரசாங்கத்தில் இருந்து அந்நியப்படுத்துகின்றன. கடந்த தேர்தல் காலங்களில், தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களையும் புறந்த்தள்ளிவிட்டு விஜேதாச ராஜபக்சவுக்கு விருப்பு வாக்குகளை அளித்த கொழும்பு வாழ் சிறுபான்மை வாக்காளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் பற்றி அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
அரச சார்பற்ற நிறுவனங்கள் என்ற சமூக அமைப்புகள் விவகாரம் எனது அமைச்சின் கீழ் வருகிறது. எனவே அமைச்சருக்கு எந்த ஒரு அரச சார்பற்ற சமூக அமைப்பு தொடர்பில் முறைப்பாடு இருக்குமானால் அதை அவர் என்னிடம் தெரிவிக்க வேண்டும். எவராவது சட்டத்தை மீறி இருப்பார்களேயானால், அதை நான் சட்டப்படி கையாள்வேன். அதைவிடுத்து எனது வரையறைக்குள் நுழைந்து, அனைத்து அரசு சார்பற்ற நிறுவனங்களும், நாட்டின் தேசிய ஐக்கியத்துக்கும், தேசிய நலனுக்கும் ஊறுவிளைவிப்பதாக பொதுப்படையாக கூற வேண்டாம் என்றும், உண்மையில் சில மத அமைப்புகளும், அரசியல்வாதிகளும்தான் தேசிய ஐக்கியத்துக்கு ஊறுவிளைவிக்கிறார்கள் என்றும் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவிடம் கூறி வைக்கிறேன்.

பௌத்த விகாரைகள் விவகாரங்களில் அரசாங்கம் தலையிட முடியாது என எப்படி அவர் கூற முடியும்? உண்மையில் இன்றைய அரசியலமைப்பில், பெளத்தத்துக்கு இருக்கும் முன்னுரிமை அப்படியே இருக்க போகிறது. இது எனக்கும், விஜேதாச ராஜபக்ச உட்பட வழிகாட்டல் குழுவின் எல்லா அங்கத்தவர்களுக்கும் தெரியும். ஆனால், இது ஒரு குடியரசு. நாட்டின் அதியுயர் அதிகாரம் மக்களுக்கே இருக்கிறது. அந்த மக்களே அரசையும், பாராளுமன்றத்தையும் தெரிவு செய்கிறார்கள். அரசியலமைப்பு பிரகாரம் அரசாங்கத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் மேலே மத தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ள, ஈரான் போன்ற ஒரு நாடு அல்ல, இலங்கை. உண்மையில் சட்டத்தை பெளத்த துறவிகள் மீறுவார்களேயானால், அவர்களுக்கு எதிராக இலங்கை வரலாற்றில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் பண்டாரநாயக்க ஒரு பிக்குவால் படுகொலை செய்யப்பட்ட போது, அந்த கொலைகாரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை இலங்கை அரசு எடுத்தது. 1971, 1989 காலகட்டங்களில் இலங்கை அரசு பயங்கரவாதமும், பெளத்த விகாரைகளுக்குள் நுழைந்தது. இவை வரலாற்று சான்றுகள். எனவே புதிய வரலாறு தேவையில்லை.

கடந்த காலங்களில் உள்நாட்டு சமூக அமைப்புகள் துரோகிகளாகவும், வெளிநாட்டு சமூக அமைப்புகள் எதிரிகளாகவும் சித்தரிக்கப்பட்டார்கள். அதை நான் பதவி ஏற்ற பிறகு மாற்றியுள்ளேன். இப்போது அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்கள் என்ற சமூக அமைப்புகளும் நமது நாட்டை கட்டி எழுப்பும் பணியில் பங்காளிகள். இது தொடர்பான கண்டிப்பான அறிவுறுத்தல்களை, எனது அமைச்சின் கீழ் வரும் அரசு சார்பற்ற நிறுவனங்களின் தேசிய செயலக பணிப்பாளர் நாயகத்துக்கு வழங்கியுள்ளேன்.

உண்மையில் தற்சமயம் நான் நாடு முழுக்க சமூக அமைப்புகளின் தேசிய, மாவட்ட, பிரதேச கட்டமைப்புக்களை உருவாக்கி வருகிறேன். இதன்மூலம் இந்த அமைப்புகளுக்கு ஒவ்வொரு மாவட்ட செயலகத்திலும், பிரதேச செயலகத்திலும் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்களின் அதிகாரபூர்வமாக கலந்துக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுப்பதே என் நோக்கமாகும். இந்த ஒருங்கிணைப்பு கூட்டங்கள் மூமகத்தான் நாட்டின் நிதி செலவிடப்படும் பெறும்பாலான தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. இங்கே அரசு சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளும் இருக்கவேண்டும். உண்மையில் சில சமூக அமைப்புகள்கூட என் இந்த நோக்கத்தை தவறாக புரிந்துக்கொண்டார்கள்.

அரச சார்பற்ற நிறுவனங்கள் என்ற சமூக அமைப்புகள் கடந்த காலங்களில் பரவலான பணிகளை செய்துள்ளன. கஷ்ட காலங்களில் அவர்களுடன் இணைந்து நான் செயற்பட்டுள்ளேன். 2005ம் வருடம் முதல் ஆரம்பித்த மிக பயங்கர களத்தில் நான், ரவிராஜ், லசந்த, விக்கிரமபாகு, சிறிதுங்க, பிரிட்டோ, நிமல்கா, பிரியாணி ஆகியோர் செயற்பட்டுள்ளோம். அப்போது பல அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகள்கூட பயந்து இருந்தனர். எனவே என்னால், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்ற சமூக அமைப்புகளை புறந்தள்ள முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here