அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை 05ஆம் திகதி கல்வி செயற்பாடுகளுக்காக மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
2023ஆம் கல்வி ஆண்டிற்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் இதன்போது ஆரம்பிக்கப்படும்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.அதனையடுத்து இவ்வருடம் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், உயர்தரப் பரீட்சையின் விவசாய பாடத்திற்கான வினாத்தாள் சட்டவிரோதமான முறையில் வெளியிடப்பட்டதன் காரணமாக அந்த பரீட்சை இரத்துச் செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.இதனையடுத்து, குறித்த பரீட்சை மீள் திகதி அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டதன் காரணமாக பாடசாலை விடுமுறை நாட்களும் நீடிக்கப்பட்டது.
இந்தநிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது