தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் மரம் வெட்டச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் குறித்த மரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் 11.06.2018 அன்று மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கிரேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து திருகேதிஷ்வரன் (வயது 40) மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தோட்ட நிர்வாகத்தினால் செய்துக்கொண்ட ஒப்பந்த அடிப்படையில் தோட்ட நிர்வாகத்திற்கு மரங்களை வெட்டிக் கொடுக்கும் இவர், வழமை போன்று 11.06.2018 அன்றும் மரங்களை வெட்டிக்கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத நிலையில் வெட்டப்பட்ட மரம் அவரின் மீது விழுந்துள்ளது.
மரத்தில் சிக்கிய இவரை ஏனையவர்கள் மீட்டு உடனடியாக லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரதே பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)