ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் கவிஞர் வேலணை வேணியன் அவர்களது கடந்த 50 ஆண்டுக்கால சமூக, அரசியல், கலாச்சார, பொது சேவைகளை முன்னிறுத்திய பணிநலன் பாராட்டு விழா கொழும்பில் நடைபெற உள்ளது.
ஜூலை 2ம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த விழாவில் தலைமை உரையை அமைச்சர் மனோ கணேசனும், விசேட உரையை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனும் ஆற்ற உள்ளனர்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பான ஜனநாயக இளைஞர் இணையம் ஏற்பாடு செய்துள்ள “வாழும்போதே வாழ்த்துவோம்” நிகழ்ச்சித்திட்ட வரிசையில் முதல் நிகழ்ச்சியாக இந்நிகழ்வு இடம்பெறும் என ஜனநாயக இளைஞர் இணையத்தின் தலைவர் சஜீவானந்தன், செயலாளர் விஷ்ணுகாந்த் ஆகியோர் விடுத்துள்ள கூட்டு அறிவிப்பில் தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவராகவும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை உபதலைவராகவும், கொழும்பு மாநகரசபை உறுப்பினராகவும், அகில இலங்கை கண்ணதாசன் மன்ற தலைவராகவும், சப்த தீவக மக்கள் ஒன்றிய அமைப்பாளராகவும், கலாபூஷண விருது பெற்றவராகவும், தமிழ் வித்துவானாகவும், தமிழ் கவிஞராகவும், தமிழ் தேவாரப்பண் பாடும் சைவப்பெரியாராகவும், தமிழ் எழுத்தாளராகவும், வேலணை வேணியன் 1980களில் இருந்து தலைநகரிலும், நாடெங்கிலும் பணியாற்றி வருகிறார்.
மூத்த பணியாளரான அவருக்குக்கான பணிநலன் பாராட்டு விழாவை அவரை மதித்து பின்பற்றும் ஜனநாயக இளைஞர் இணைய இளைய தலைமுறை முன்னெடுக்கின்றது.
வேலணை வேணியன் அவர்களை நேரடியாகவும், அவரது பணிகள் மூலமும் அறிந்த அனைத்து பெருமக்களும், நண்பர்களும், ஊடகவியலாளர்களும், கலைஞர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டு இந்த மூத்த தமிழ் பேசும் பணியாளரை பாராட்டி மகிழ்விக்க வேண்டும் என ஜனநாயக இளைஞர் இணையம் கோருகிறது.