அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியர்களுக்கு 60 வயது பூர்த்தியான அரச உத்தியோகத்தர்களுக்கு ஓய்வு வழங்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கான தடை உத்தரவை எதிர்வரும் மார்ச் மாதம் 29ஆம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
176 மருத்துவ நிபுணர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவதற்கு எதிராக தாக்கல் செய்த ரிட் மனு நேற்று விசாரணைக்கு வந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டதாக டெய்லி சிலோன் நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
அதன்பிறகு, மனு மீதான விசாரணையை மார்ச் 24, 28, 29 ஆகிய தேதிகளில் நடத்துவதற்கான திகதிகளை நிர்ணயித்த நீதிபதிகள் குழாம், தற்போது பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவை மார்ச் 29ஆம் திகதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
நிபுணர்கள் பொதுவாக 63 வயது வரை பயிற்சி செய்ய முடியும் என்று மனுதாரர்கள் கூறுகின்றனர்.
ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் 17 ஆம் திகதி, 60 வயதில் மருத்துவர்களுக்கு ஓய்வு அளிக்க அமைச்சரவை முடிவு செய்தது, இந்த முடிவு சட்டத்திற்கு எதிரானது என்று மனுதாரர் வைத்தியர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.