சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பங்களிப்புடன் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஏற்பாட்டில் “இளைஞர், யுவதிகளுக்கான தொழில் முயற்சிகள்” எனும் தலைப்பிலான இரண்டுநாள் வதிவிட பயிற்சிப்பட்டறை ஹட்டன் சீடா நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 24ம், 25ம் ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளதென இ.தொ.கா ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
இ.தொ.கா வின் உப தலைவரும், சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான திரு.எஸ்.அருள்சாமியின் தலைமையில் நிகழும் இப்பயிற்சிப் பட்டறையில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 50 இளைஞர், யுவதிகள் இதில் பங்குபற்றுனர்களாக கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் வழிகாட்டலுடன் மலையக இளைஞர், யுவதிகளுக்கான சுயதொழில் முயற்சிகள் வியாபாரம் மற்றும் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றுவதற்கான தகைமைகள் போன்றன இப்பயிற்சிப் பட்டறையில் விரிவாக ஆராயப்படவுள்ளன.
இரண்டு நாள் பயிற்சிப் பட்டறைக்கு கருத்துரை வழங்குவதற்காக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்து இணைப்பாளர் திரு.சக்திவேல், நுவரெலிய மாவட்ட மாணவ ஆலோசகர் திரு.மகேந்திரன், நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான திரு.பி.இராஜதுரை ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இப்பயிற்சிப்பட்டறைக்கு விசேச அதிதிகளாக நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா தலைவருமான முத்து சிவலிங்கம் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.தேவதாஸ்
ஊடக இணைப்பாளர்
இதொகா