ஹட்டன் நகரிலுள்ள நட்சத்திர சதுக்கப் பகுதியில் அமைந்துள்ள பொது மலசலகூடத் தொகுதி முறையாகப் பராமரிக்கப்படாததன் காரணமாக நிரம்பி வழிவதால், அப்பகுதியிலுள்ள பொதுமக்கள், வர்த்தகர்கள், மற்றும் குடியிருப்பாளர்கள் கடும் அசௌகரியத்திற்கும் சுகாதார அச்சுறுத்தலுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர்.
வர்த்தக நிலையங்களும் குடியிருப்புகளும் அமைந்துள்ள இந்தப் பகுதியில் உள்ள பொது மலசலகூடத் தொகுதி நீண்டகாலமாக முறையாகப் பராமரிக்கப்படாததால் கழிவுநீர் மற்றும் கழிவுகள் தேங்கி வெளியேறுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், ஈக்கள், நுளம்புகள் உள்ளிட்ட நோய் காவி பூச்சிகளின் பெருக்கமும் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், மலசலகூடத் தொகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் கழிவுகள் சில சந்தர்ப்பங்களில் அதிகாலை வேளைகளில் திறந்த வெளியில் விடப்படுவதாகவும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால், இது வெறுமனே சுகாதாரப் பிரச்சினையாக மட்டுமன்றி, பொது சுகாதாரத்திற்கும் நீர்ச் சூழலுக்கும் கடுமையான அச்சுறுத்தலாகவும் மாறக்கூடியதாகும்.
திறந்த வெளியில் விடப்படும் கழிவுநீர் நகரின் வடிகால் கட்டமைப்பின் ஊடாக டிக்கோயா ஓடையில் கலப்பதாகவும், இறுதியில் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்குச் செல்லக்கூடிய நிலை காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு, டிக்கோயா ஓடையிலும் காசல்ரீ நீர்த்தேக்கத்திலும் கழிவுநீர் கலக்கின்றதா என்பதை அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்த நீர் மாதிரிகளைப் பெற்று பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.
அதேவேளை, குறித்த பகுதி ஹட்டன்–டிக்கோயா நகர சபை நிர்வாகப் பகுதிக்குள் அமைந்துள்ளதுடன், பொதுச் சுகாதாரம், சுகாதார வசதிகள் மற்றும் பொதுப் பயன்பாட்டு சேவைகள் தொடர்பில் நகர சபைக்கு பொறுப்புகள் உள்ளன.
எனவே, நிரம்பி வழியும் மலசலகூடக் குழிகளை உடனடியாக அகற்றி, பாதிக்கப்பட்ட பகுதியை கிருமிநாசினி மூலம் சுத்திகரிப்பதுடன், கழிவுநீர் திறந்த வெளியில் வெளியேற்றப்படுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும், மத்திய சுற்றாடல் அதிகார சபை, ஹட்டன்–டிக்கோயா நகர சபை மற்றும் சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள் இணைந்து கள ஆய்வொன்றை மேற்கொண்டு, குறித்த கழிவுநீர் டிக்கோயா ஓடையையும் காசல்ரீ நீர்த்தேக்கத்தையும் சென்றடைகின்றதா என்பது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட பொது மலசலகூடம் முறையான பராமரிப்பின்மையால் மக்களின் சுகாதாரத்திற்கும் சுற்றாடலுக்கும் அச்சுறுத்தலாக மாறுவதைத் தடுப்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்பாகும் என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.




