நுவரெலியா மாவட்டம் ஹட்டன் கல்வி வலையத்திற்கு உட்பட்ட ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி 105 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்திசெய்யப்படவுள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக மலையகத்தில் காணப்படும் 25 பாடசாலைகளை கணித விஞ்ஞான பாடசாலைகளாக தரம் உயர்த்தி அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் வேலைத்திட்டங்களை பார்வையிட கல்வி இராஜாங்க அமைச்சர் கல்லூரிக்கு நேரடியாக விஜயம் ஒன்றினை அண்மையில் மேற்கொண்டார்.
கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதர் , கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்தி பணிப்பாளர் திருமதி சபாரஞ்சன் ஆகியோரும் இதன்போது இணைந்து கொண்டனர்.
இவர்களுடன் அனைத்து வேலைதிட்டங்களையும் பார்வையிட்ட கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் இந்த பாடசாலையின் அபிவிருத்திக்கான உதவிகள் செய்யபடும் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த பாடசாலையில் உயர்தரத்தில் கணிதம்¸ விஞ்ஞானம்¸ வர்த்தகம்¸ கலை மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக உயர்தர விஞ்ஞானம் கணித பிரிவுகள் மற்றும் ஏனைய பிரிவுகளையும்; 105 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவற்றில்; கணித விஞ்ஞான உபகரணங்களுக்கு 20 இலட்சம் ரூபாவும், பிரதான மண்டபம் அடங்கலாக புதிய கட்டிடங்கள் அமைக்க 54393350 ரூபாவும்¸ கட்டட திருத்திற்கு 2500000 ரூபாவும்¸ மாணவர்களுக்கான தளபாடங்கள்¸ அதிபர்¸ ஆசிரியர்களுக்கான தளபாடங்கள்¸ வகுப்பறைகளுக்கான அலுமாரிகள்¸ வைற்போட்கள்¸ கிறீன்போட்கள்¸ பல்லூடக தொகுதி¸ மடிக்கணணிகள்¸ டுப்லோ இயந்திரம்¸ போன்றவற்றுக்காக 34421030 ரூபாவும் செலவு செய்யபட்டு அனைத்து பொருட்களும் பாடசாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கபட்டுள்ளது.
மிகுதி பணத்தில் கட்டட திருத்தம்¸ புதிய கட்டட அமைப்புகள் உட்பட அனைத்து வேலைகளும் நடைபெற்றுவருகின்றன.
மாணவர்களின் சுகாதார நலன் கருதி பற்சிகிச்சை நிலையம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.
இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட திருவள்ளுவர் சிலை ஒன்றும் இங்கு பிரதிஸ்டை செய்யபட்டுள்ளது.
இப்பாடசாலை மேலும் அபிவிருத்தி அடைந்து மலையக மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் என்று இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த பாடசாலையின் அபிவிருத்தியில் எந்த விதமான இனமத மொழி வேறுபாடுகள் இன்றியும் தொழிற்;சங்க¸ அரசியல் பேதம் இன்றியும் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.