ஹரியானா மாநிலத்தில் குர்மீத் ராம் ரகீம் சிங்கின் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பஞ்சாப்,ஹரியானா மற்றும் டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக விசாரணை அறிக்கையை அளிக்க வேண்டும் என்று ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தக் கலவரத்தில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஹரியானா கலவரம் எதிரொலி காரணமாக டெல்லியில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 8ம் தேதி வரை டெல்லியில் 11 மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கலவரம் தொடர்பாக ஹரியானா உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது. அப்போது குர்மீத் ராம் ரகீம் சிங்கின் சொத்துகளை முடக்கி கலவரம் சேதம் மதிப்பினை ஈடுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வன்முறை தொடர்பாக இன்று காலை 10 மணிக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பஞ்சாப் மற்றும் ஹரியானா அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியிலுருந்து ஹரியானா செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.கலவரம் தொடர்பாக ரூ.12 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே துறை கூறியுள்ளது.இதனிடையே கூடுதல் படைகளை அனுப்ப வேண்டும் என்று மாநில அரசுகள் மத்திய அரசிடம் கேட்டு கொண்டுள்ளது.இந்நிலையில் இரு மாநில முதலமைச்சர்களுடன் நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் கேட்டறிந்தார்.