ஹைலன்ஸ் கல்லூரி தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்கிறார் பழைய மாணவரான திலகர் எம்பி!

0
138

ஹைலன்ஸ் கல்லூரியின் 125 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு எதிர்வரும் 29 ம் திகதி நடைபெறவிருப்பதாக திட்டமிடப்பட்டுள்ள விழாவுக்கு தனக்கு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலோ அல்லது பழைய மாணவர் என்ற வகையிலோ இதுவரை அழைப்பிதழ் எதும் கிடைக்கப்பெறவில்லை என நுவரெலியா மாவட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து கருடன் செய்திகள் சார்பாக அவரிடம் வினவியபோது,

நான் ஹைலன்ஸ் கல்லூரியில் 1991- 1993 காலப்பகுதியில் உயர்தர வகுப்பில் கல்விகற்று பல்கலைகழகத்திற்கும் தெரிவான பழைய மாணவன். நாங்கள் கல்வி கற்கும் காலத்தில்தான் கல்லூரியின் நூற்றாண்டு விழாவுக்கான முன்னேற்பாடாக நிதி சேகரிப்புக்காக சந்தை ஒன்றும் கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. நாங்கள் சமகால மாணவர்களாக அதிகளவில் எமது உழைப்பையும் அர்ப்பணிப்பையம் வழங்கியிருந்தோம்.

ஆனால் நூற்றாண்டு விழா என்ற ஒன்று நடைபெற்றதாக எனக்கு நினைவில் இல்லை.
இப்போது நூற்றி இருபத்தைந்தாவது ஆண்டு விழா நடக்கவிருப்பதாகவும் அதற்கு எனக்கு அழைப்பு விடுப்பதில்லை என விழா ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்திருப்பதாகவும் ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். அப்போதுதான் 125 வது ஆண்டு கொண்டாடவிருப்பது பற்றி நான் அறிந்து கொண்டேன். என்னைப் பொறுத்தவரை ஹைலன்ஸ் கல்லூரிக்கு இந்த ஆண்டு 124வது ஆண்டுதான். அடுத்த வருடம்தான் 125 வருடங்கள் ஆகின்றன. இது குறித்து மலையகப் பத்திரிகை ஒன்று ஆதாரங்களுடன் செய்தியும் வெளியிட்டிருந்தது.

எது எவ்வாறாயினும் 29 ம் திகதி நடைபெறவிருப்பதாக சொல்லப்படும் நிகழ்ச்சி தொடர்பில் இதுவரை எனக்கு எவ்வித அழைப்புகளும் விடப்படவில்லை. அல்லது அத்தகைய திகதியில் என்னால் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியுமா என்று எற்பாட்டாளர்கள் தரப்பில் இருந்து எவ்வித உறுதிப்படுத்தல்களும் கூட இதுவரை செய்யப்படவில்லை. வழமையாக ஏதும் விழாக்களுக்கு அழைப்பு விடுப்பதெனில் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் ஏற்பாட்டாளர்கள் எம்மிடம் திகதி உறுதிப்பாடு எடுத்துக்கொள்வார்கள். இதுவரை என்னிடம் அப்படியான உறுதிப்படுத்தல் எதும் இடம்பெறவில்லை. ஆனால் எனக்கு அழைப்பு விடுப்பதில்லை என தீர்மானம் எடுத்திருப்பதாக செய்திகள் வாயிலாகவே அறிகிறேன்.

பழைய மாணவனாக அதுவும் அங்கிருந்து பல்கலைக்கழகத்திற்கும் பின்னர் தலைமைத்துவ பண்பகளை வெளிப்படுத்தி பாராளுமன்றத்திற்கும் தெரிவான ஒரு பழைய மாணவனை கல்லூரி விழாவுக்கு அழைக்க கூடாது என ஏன் தீர்மானம் எடுத்தார்கள் என ஊகிக்கமுடியவில்லை. இந்தக் கல்லூரியில் படிக்காதவர்களினதும் எந்தக் கல்லூரியிலும் படிக்காதவர்களினதும் அரசியல் வழிநடாத்தல்கள் இதன் பின்னணியில் இருந்திருக்கலாம் என உணர்கிறேன்.

ஹைலன்ஸ் கல்லூரியில் பழைய மாணவராக இருந்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பு கிடைத்த நான்காவது ஆளாக நான் இருக்கின்றேன். முதலாமவர் மக்கள் கவிமணியும் தொழிலாளர் தேசிய சங்க தொடக்க கால தலைவர்களில் ஒருவருமான ஸி.வி.வேலுப்பிள்ளை. அப்போது ஹைலனஸ் மெதடிஸ்ட் கல்லூரி என்றே அழைக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக 1990 காலப்பகுதியில் ஈரோஸ் சார்பில் நியமன எம்பியாக தெரிவு செய்யப்பட்ட ராகலை ராமலிங்கம் ஹைலன்ஸ் கல்லூரியின் பழைய மாணவராகும். அதேபோல மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் பெ.சந்திரசேகரன் ஹைலன்ஸ் கல்லூரியின் பழையமாணவராவார்.

முதல் மூவரும் இப்போது உயிருடன் இல்லை. உயிர்ப்புடன் நான் பாராளுமன்ற அரசியலில் செயற்பட்டுக்கொணடிருக்கிறேன். ஆனால் நான் பாடசாலை விடயங்களில் அரசியல் தலையீடுகளை செய்பவனில்லை.

இப்போது கூட எமது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித்தலைவரும் கல்வி ராஜாங்க அமைச்சருமான வே.ராதாகிருஷ்ணன் அமைச்சின் நிதியீட்டத்தில் ஹைலன்ஸ் கல்லூரிக்கு கேட்போர் கூடத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமானம் நடைபெற்றுவருகின்றது. நாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பிக்கள் மாகாண சபை உறுப்பினர்கள் எல்லோரும் வந்து அதன் அடிக்கல் நாட்டு விழாவை அரசியல் விழாவாக்க விரும்பவில்லை. அமைச்சர் மாத்திரம் வருகை தந்து அந்த அடிக்கல்லை நாட்டி வைத்தார். ராஜாங்க அமைச்சரின் நிதி ஒதுக்கீடும் அரசாங்க நிதி ஒதுக்கீடுதான்.

அந்த நிதியைக் கொண்டு வருவதில் எங்களது பங்களிப்பும் உண்டு. நானும் அமைச்சர் திகாம்பரமும், அமைச்சர் ராதாகிருஷ்ணனும் கூட்டாகவே தேர்தலில் பிரசாரம் செய்து கூட்டணியாக மாவட்டத்தில் முதல் மூன்று இடத்தைப் பிடித்தவர்கள். அந்த பலம்தான் எங்களுக்கு அமைச்சுப்பதவியைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. ஆனாலும் அந்த நிதியினைக் கொண்டுவந்தமைக்காக நாங்கள் ஹைலன்ஸ் கல்லூரியில் அரசியல் நடாத்தவில்லை. வேறு எந்த பாடசாலையிலும் கூட நாங்கள் அவ்வாறு நடந்துகொள்வதில்லை. கல்வி ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் அமைச்சராக சுயாதீனமாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.

ஆனால், தற்போதைய ஹைலன்ஸ் கல்லூரி நிர்வாகிகளோ அல்லது விழா ஏற்பாட்டாளர்களோ சுயாதீனம் இல்லாது ஊடகவியலாளர் மாநாடுகளை நடாத்தி நிலைமையை சிக்கலுக்குள்ளாக்கி இருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஆக தற்போதைய விடயத்தை அரசியலாக்கியிருப்பதற்கான பொறுப்பை கல்லூரி நிர்வாகிகளே ஏற்க வேண்டும். அவர்களது பின்னணியில் ஏதும் அரசியல் அழுத்தமோ அல்லது நகர்வோ இருக்கின்ற பட்சத்தில் நாங்களும் அரசியல் ரீதியாகவே அதனை அணுகவேண்டியிருப்பதையும் தவிர்க்க முடியாதுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here