பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் சிறுவர்களின் மந்தபோசனை நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய போசனை பிஸ்கட் அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நுவரெலியா சினிசிட்டா அரங்கில் இடம்பெற்ற சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய அளவில் ஒப்பிடுகையில் பெருந்தோட்ட பகுதிகளில் சிறுவர்களின் மந்தபோசனை நிலை அதிகரித்துக் காணப்படுவதாகவும் இது சிறுவர்களின் சுகாதார நிலைக்கு ஆரோக்கிய தன்மை இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கடந்த கால ஆட்சியாளர்கள் இவற்றை கண்டு அமைதி காத்ததாகவும் ஆனால் தனது அமைச்சின் ஊடாக இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய போசனை உணவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சிறுவர்கள் எதிர்கால தலைவர்கள் என்றும் தன்னை போன்று சிறுவர்களை எதிர்கால தலைவர்களாக மாற்ற வேண்டுமாயின் அவர்களின் போசனை மற்றும் கல்வி தொடர்பில் அதிக கரிசனை கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் பழனி திகாம்பரம் கூறினார்.
சிறுவர்களின் நலன்கருதி அவர்களை லயத்து வீட்டில் இருந்து தனி வீட்டுக்கு நிலைமாற்ற தனது அமைச்சு மூலம் தனிவீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் அமைச்சின் நிதியின் ஊடாகவும் உலக வங்கி நிதி ஊடாகவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தான் பல சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வரும் நிலையில் அதனை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் தவறான விமர்சனங்களை முன்வைப்பதாகத் தெரிவித்த அமைச்சர், மலையக மக்கள் அவற்றுக்கு ஏமாறக் கூடாது என்றும் தொடர்ந்தும் தனது திட்டங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
சர்வதேச சிறுவர் தினத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போசனை பிஸ்கட் தொடர்ந்து முதல்கட்டமாக தொடர்ந்து எதிர்வரும் 8 மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும் அதற்கென 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.