கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் அனைத்து ஆயுதங்களும் அழிந்து போயுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
யுத்த காலத்தில் கப்பல்கள் மூலம் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட ஆயுதங்களை களஞ்சியப்படுத்துவதற்கு கொஸ்கம முகாமே மிகவும் பொருத்தமாக இருந்தது.
இங்கிருந்து ஏனைய பகுதிகளுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டன. யுத்தம் முடிந்த பின்னரும் அங்கிருந்து ஆயுதங்கள் ஏனைய பகுதிகளுக்கு மாற்றப்பட்டு வந்தன.
10 வீதமான ஆயுதங்களே இங்கு எஞ்சியிருந்தன. இன்னும் ஆறுமாதகாலம் சென்றிருந்தால் இவை கூட வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கும் என அவர் கூறினார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மேல் மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
எனினும், இவ்விபத்துக்கான காரணம் இது வரையிலும் கண்டறிப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,
இராணுவ முகாமில் ஆயுதங்கள் சர்வதேச தரத்திற்கு ஏற்றவகையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன.
யுத்தகாலத்தில் சர்வதேசத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஆயுதங்களே இவ்வாறு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன.
இவற்றில் ஏற்கனவே, பெரும் தொகையான ஆயுதங்கள் அப்புறப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகாமில் எஞ்சியிருந்த 10 வீதமான ஆயுதங்களே இவ்வெடிப்பு சம்பவத்தில் அழிந்து போயுள்ளதாக மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இதனை அனுபவமாகக் கொண்டு ஏனைய பகுதிகளில் உள்ள ஆயுதக் களஞ்சியங்களையும் ஆய்வு செய்வதற்கு இராணுவத்தளபதி விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.
இராணுவ முகாம்கள் மாத்திரமன்றி கடற்படை மற்றும் விமானப்படை முகாம்களில் உள்ள ஆயுதக் களஞ்சியங்களும் ஆய்வு செய்யப்படவிருப்பதாக மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க சுட்டிக் காட்டினார்.
விபத்து இடம்பெற்ற இராணுவ முகாமுக்குள் வேறு எந்த உயிரிழப்புக்களும் ஏற்பட்டிருக்கவில்லை என்றும், முகாமிலிருந்த பிரதான கட்டடம் முற்றாக சேதமடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
வெடிவிபத்தில் வெடித்துச் சிதறிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களின் பாகங்களை இராணுவத்தினர் சேகரித்து வருவதுடன், சுற்றயல் பகுதியில் உள்ள மக்களின் வீடுகள் மற்றும் காணிகளைச் சுத்தப்படுத்தும் பணிகளையும் இராணுவத்தினர் ஆரம்பித்திருப்பதாகவும் மேலும் கூறினார்.