இதுதான் வெற்றியின் இரகசியம் – மெஸ்ஸியின் கனவை தகர்க்க முயற்சிக்கும் குரோஷியா

0
95

பிபா உலகக்கோப்பை 2022 அரையிறுதி போட்டியில் ஆர்ஜன்டினா அணியை எதிர்த்து விளையாடுவதற்கு எந்த பயமுமில்லை என்று குரோஷியா அணியின் ஜோசிப் ஜுரனோவி தெரிவித்துள்ளார்.

பிபா உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு குரோஷியா, ஆர்ஜன்டினா, மொராக்கோ, பிரான்ஸ் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இதில் முதல் அரையிறுதி ஆட்டம் ஆர்ஜன்டினா – குரோஷியா அணிகளும், இரண்டாவது அரையிறுதி ஆட்டம் பிரான்ஸ் – மொராக்கோ அணிகளும் மோத உள்ளன.

நட்ச்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜன்டினா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், குரோஷியா அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்று பார்க்கப்படுகிறது.

காரணம் ஒவ்வொரு ஆட்டத்திலும் கூடுதல் நிமிடங்கள் வரை ஆட்டத்தை கொண்டு செல்லும் குரோஷியா அணி, பெனால்டி உதை மூலமாக வெற்றிபெறுவதால், ஆர்ஜன்டினா அணி வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் குரோஷியா நடுகள வீரர் ஜோசிப் ஜுரனோவி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், “உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதியில் குரோஷியா அணியை எதிர்த்து ஆர்ஜன்டினா விளையாட உள்ளது.

இதற்காக குரோஷியா அணி பயப்பட வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன். எங்களின் ஆட்டத்தில் கவனம் செலுத்தினால் மட்டும் போதுமானது. எங்கள் அணியின் வெற்றிக்கான ஒரே இரகசியம் ஒற்றுமை தான்.

குரோஷியா வீரர்கள் அனைவரும் ஒரே குடும்பம் போல் கால்பந்தை விளையாடுகிறோம். ஆர்ஜன்டினா வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு என்று பிரத்யேக திட்டம் எதுவுமில்லை.

எப்போதும் குரோஷியா அணியினர் ஒரு வீரருக்கான திட்டத்துடன் களமிறங்க மாட்டோம். ஒட்டுமொத்த அணியையும் தடுக்கவே களமிறங்குகிறோம். மேன் மார்க்கிங் உள்ளிட்ட திட்டங்களுடன் வரப்போவதில்லை. ஏனென்றால் அர்ஜன்டினா அணி என்பது மெஸ்ஸி மட்டுமல்ல என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, குரோஷியா அணியின் நடுகள வீரர்களான மோட்ரிச், கோவசிக், பிரோசோவிக் உள்ளிட்டோர் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். நடுகள வீரர்களிலேயே மிக சிறப்பாக செயல்பட கூடியவர்கள். அவர்களின் பந்தை கொண்டு செல்வதும், வங்கியில் பணத்தையும் வைத்திருப்பதும் ஒன்றுதான்.

அவ்வளவு பாதுகாப்பாக செயல்படுகிறார்கள். அவர்களுடன் விளையாடும் போது அனைவருக்கும் கால்பந்து விளையாட்டு எளிதாக இருக்கிறது.” என்று தெரிவித்தார்.

இதனிடையே காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் ஜாம்பவான் நெய்மரின் உலகக்கோப்பை கனவை தகர்க்க குரோஷியா அணி, ஆர்ஜன்டினா ஜாம்பவான் மெஸ்ஸியின் கனவையும் தகர்க்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதேபோல் குரோஷியா அணி 2018ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here