இனி விழுந்தாலும் விதையாக விழுவோம். விருட்சமாக மீண்டெழுவோம்

0
97

” தோல்வியே சிறந்த ஆசான். அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு, முன்னேறுவதற்கான வழிகளை நாம் அடையாளம் காண வேண்டும். எனவே, தோல்விகளை கண்டு துவண்டுவிடவேண்டாம். அடிபட்டதும், அடிபணிந்து வாழ்ந்ததும் போதும். இனி விழுந்தாலும் விதையாக விழுவோம். விருட்சமாக மீண்டெழுவோம். ” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயம், திம்புள்ள தமிழ் மகா வித்தியாலயம், மவுண்ட்வேர்ணன் தமிழ் மகா வித்தியாலயம், போகாவத்தை சிங்கள வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலிருந்து புலமைப் பரிசிலில் சித்தி பெற்ற மாணவர்களுக்கும், க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும், போகாவத்தை மற்றும் ஸ்டோனிகிளிப் வட்டார கரப்பந்தாட்ட போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வும், ஸ்டோனிகிளிப் வட்டார கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

கொட்டகலை ஸ்டோனிகிளிப் ஜொலி போய்ஸ் விளையாட்டு கழகத்தின் தலைவரும், கொட்டகலை பிரதேச சபை உறுப்பினருமான எஸ்.லெட்சுமண் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், சிறப்பு அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளரும், தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன், கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத், உப தலைவர் ஐ.பாலசுப்பிரமணியம், இ.தொ.காவின் இளைஞர் அணி பொது செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ், கழக உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தோட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

” எம்மில் சிலர் தோல்வியைக் கண்டு அஞ்சுகின்றனர். துவண்டுபோய் விடுகின்றனர். தோல்வியைக்கூட எமக்கு சாதகமான விடயமாக மாற்றிக்கொள்ள வேண்டும். எமது பலம் எது, பலவீனம் எது என்பதை அதன் ஊடாக அறியலாம். எங்கு தவறு இடம்பெற்றுள்ளது என்பதையும் உணரலாம். தோல்வி என்பது சிறந்த ஆசான். பல பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்.

தோற்றுவிற்றால், எம்மை ஒதுக்கி, கண்டு கொள்ளாத இதே சமூகம்தான், தோல்வியில் இருந்து மீண்டுவிட்டால் வாழ்த்தி வரவேற்கும். மாலைபோட்டு மரியாதை செலுத்தும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவேதான் தோல்வியைக் கண்டு அஞ்ச வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.

நாம் அடிமட்டத்தில் இருக்கின்றோம். இனியும் பின்நோக்கி செல்ல இடமில்லை. எனவே, நாம் முன்வேறவேண்டும். அதற்காக மட்டுமே முயற்சிக்க வேண்டும்.

போதை பாவித்தால் தூக்கம் வராது, நன்றாக படிக்கலாம் என ஏமாற்றி மாணவர்களை, சிலர் போதைக்கு அடிமையாக்குகின்றனர். போதை என்பது ஆபத்தானது. உயிரை பறிக்ககூடியது. எனவே, எவரும் அந்த அபாயத்துக்குள் விழுந்துவிடக்கூடாது.

30 வருடங்கள் எமக்கு பிரஜா உரிமை இருக்கவில்லை. பின்நிலைப்படுத்தப்பட்டுள்ளோம். இந்நிலையில் போதைப்பொறிக்குள்ளும் நாம் சிக்கிவிடக்கூடாது. இது விடயத்தில் பெற்றோர் விழிப்பாக இருக்க வேண்டும். இதற்கு மேலும் அடிபணிந்தோ, அடிவாங்கியோ வாழ முடியாது. முன்னேற வேண்டும்.” – என்றார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here