ஊழல் இடம்பெற்றுள்ளது என்பதை நிரூபித்தால் பதவி விலக தயார் – தவிசாளர் ராஜமணி பிரசாந்த் தெரிவிப்பு

0
127

” கொட்டகலை பிரதேச சபையில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன், நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து அப்பட்டமான பொய்யாகும். ஊழல் இடம்பெற்றுள்ளது என்பதை நிரூபித்தால் பதவி விலக தயார்.” என கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் இராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.நுவரெலியா மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், நுவரெலியா பிரதேச செயலக மண்டபத்தில் அதன் தலைவரும், இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (28) நடைபெற்றது.

இ.தொ.காவின் தவிசாளரும், நிதி செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதன்போது கொட்டகலை பிரதேச சபை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன், அதிஉயர் சபையான நாடாளுமன்றத்தில் பொய்யான கருத்துகளை முன்வைத்துள்ளார் எனக்கூறி, அதற்கான ஆதாரங்களை தவிசாளர் இராஜமணி பிரசாந்த் முன்வைத்தார். விசேட விளக்கமொன்றையும் முன்வைத்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

” கொட்டகலை பிரதேச சபைக்கு நகர அபிவிருத்தி சபை 3 ஏக்கர் காணி வழங்கியுள்ளது என ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அது பொய். ஒரு ஏக்கர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அது இலவசமாக வழங்கப்படவில்லை. அதற்கும் மாதாந்தம் நாம் கூலி செலுத்துகின்றோம்.

இராதாகிருஷ்ணன் பிரதேசசபை தவிசாளராக இருந்த காலத்தில்தான் ஊழல்கள் இடம்பெற்றுள்ளன. 18 குடியிருப்புகள் இருந்த பகுதியொன்றில் லஞ்சம் வாங்கிக்கொண்டு, தனக்கு வேண்டப்பட்ட ஐவருக்கு மாத்திரமே உறுதிப்பத்திரம் பெற்றுக்கொடுத்துள்ளார்.

அவர் இராஜாங்க அமைச்சராக இருந்துள்ளார். எனவே, பொறுப்புடன் கதைக்க வேண்டும், தகவல்களை வெளியிட வேண்டும். ஒரு சிலரை திருப்திபடுத்துவதற்காக பொய்யுரைக்ககூடாது. கொட்டகலை பிரதேச சபை, நுவரெலியா மாவட்டத்திலேயே சிறந்த பிரதேச சபை என்பதற்காக இரு தடவைகள் விருந்து வென்றுள்ளது. ஊழல் எதுவும் இடம்பெறவில்லை. அவ்வாறு இடம்பெற்றுள்ளது என நிரூபித்தால் பதவி விலக நான் தயார். முறைப்பாடுகளை முன்வைக்க இடங்கள் உள்ளன. அங்கு முறைப்பாடுகளை தெரிவிக்கலாம்.

கடந்த காலத்தில் மலையக மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சதாசிவனும், முன்னாள் செயலாளராக இருந்த பிரதீப் ஆகியோரும் நுவரெலியா பிரதேச சபையின் புதிய சபை கட்டிடத்தை நிர்மாணிக்கும் பணியில் ஊழல் செய்துள்ளதாவும், அதற்கான ஆதரங்களும் தன்னிடம் உள்ளதாகவும் பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிரசாந்த் மேலும் தெரிவித்தார்.

இறுதியில் எம்.பி. இராதாகிருஷ்ணன் மற்றும் தவிசாளர் ராஜமணி பிரசாந்த ஆகியோர் முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றை முன்வைக்குமாறு பிரதேச செயலாளருக்கு, குழுவின் தலைவர் ஜீவன் தொண்டமான் ஆலோசனை வழங்கினார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here