இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இச்செயலானது நகைப்புக்குரியது. மக்கள் எதிர்ப்பு.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்திய அரசாங்கத்தின் உதவியால் மலையகத்தில் சில பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளுக்கு உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கான திறவுகோல்களைச் சேகரித்து
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஊடாக மீண்டும் பயனாளிகளுக்கு வழங்கும் ஏமாற்று நடவடிக்கை ஒன்றில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஈடுபட்டு வருவது நகைப்புக்குரிய செயலாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

கிடப்பில் கிடந்த இந்திய வீடமைப்பு திட்டத்தை முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் நல்லாட்சி அரசாங்க காலத்தில் மலையகப் பகுதிகளில் இந்திய வீடமைப்புத் திட்டத்தை உரிய முறையில் ஆரம்பித்து வைத்தார். ஆயிரக்கணக்கான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு உரிய பயனாளிகளுக்கு அந்த வீடுகளுக்கான திறவுகோல்கள் ஒப்படைக்கப்பட்டன.

இவ்வாறானதொரு நிலையில் ஏற்கனவே திறவுகோல்கள் ஒப்படைக்கப்பட்ட பயனாளிகளிடமிருந்து அவற்றை மீண்டும் பெற்று அவற்றை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஊடாக வழங்கும் நடவடிக்கை ஒன்றில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. இதற்கு இந்திய வீடமைப்பு திட்டத்தின் பயனாளிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இன்றைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும் மலையக பகுதிகளில் இந்திய வீடமைப்புத் திட்டத்தில் எந்த ஒரு வீடும் புதிதாக நிர்மாணிக்கப்படவில்லை.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இந்திய வீடமைப்பு திட்ட பயனாளிகளிடமிருந்து மீண்டும் திறவுகோல் களைப் பெற்று இந்த வீடுகளை தாங்கள் தான் நிர்மாணித்துக் கொடுத்தோம் என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவரையும் ஏனையவர்களையும் ஏமாற்றும் நடவடிக்கைகளில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளமையானது நகைப்புக்குரிய விடயமாகும்.

திறவுகோல்களை மீண்டும் ஒப்படைக்குமாறு தோட்ட முகாமையினரும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தினரும் பயனாளிகளை வற்புறுத்தி வருகின்றமையை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது.