இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. வீடியோ உள்ளே……!

பிரித்வி ஷா, இஷான் கிஷனின் அதிரடி ஆட்டம், கேப்டன் தவணின் பொறுப்பான பேட்டிங் ஆகியவற்றால் கொழும்பு நகரில் நேற்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் குவித்தது. 263 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 36.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இலங்கைக்கு இரண்டாம் தர இந்திய அணியை அனுப்பி அவமதித்துவிட்டார்கள் என்று இலங்கை முன்னாள் கேப்டன் ரனதுங்கா கூறியதற்கு தகுந்த பதிலடியை இந்திய அணி வழங்கியுள்ளது.

24 பந்துகளில் 9 பவுண்டரி உள்ளிட்ட 43 ரன்கள் குவித்த தொடக்க வீரர் பிரித்வி ஷாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.இலங்கை மண்ணில் இந்திய அணி தொடர்ந்து 9-வது ஒருநாள் போட்டி வெற்றியை இதன் மூலம் பதிவு செய்துள்ளது.

இந்திய அணியின் வெற்றிக்கு பிரித்வி ஷா, இஷான், தவண் ஆகிய மூவரின் பேட்டிங்தான் முக்கியக் காரணம். அதிலும் பிரித்வி ஷா, இஷான் கிஷன் ஆட்டத்தை பாராட்டியே ஆக வேண்டும்.

பிரித்வி ஷாவும், இஷான் கிஷனும் ஆட்டமிழந்து செல்லும் போது, ஏறக்குறைய போட்டியை முடித்துக் கொடுத்துவிட்டுச் சென்றனர்.

பிரித்வி ஷா தொடக்கத்திலிருந்தே இலங்கை வீரர்களின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்து பவுண்டரிகளாக விளாசினார். அதிலும் சமீராவின் முதல் ஓவரில் இரு பவுண்டரிகளாக ஆஃப்சைடில் பிரித்வி ஷா விளாசினார், இசுரு உதானா ஓவரில் 3 பவுண்டரிகள் என பிரித்வி ஷா இலங்கை பந்துவீச்சாளர்களை திணறவிட்டார். பிரித்வி ஷாவின் அதிரடியால் 4.5 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை எட்டியது.பிரித்வி ஷா 43 ரன்களில் டி சில்வா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து இஷான் கிஷன் களமிறங்கினார். தனது சர்வதேச முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய இஷான் கிஷன் சிறிதுகூட அச்சமின்றி தான் சந்தித்த முதல் பந்தில் , டி சில்வா பந்தில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு அதிர்ச்சி அளித்தார், அடுத்த பந்தில் பாயின்ட் கவரில் ஒரு பவுண்டரி என மிரளவைத்தார். அதன்பின் இஷான் கிஷன் தனக்கு கிைடத்த வாய்ப்்பில் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் விளாசித் தள்ளி 33 பந்துகளில் தனது முதலாவது அரைசதத்தை அறிமுக ஆட்டத்தில் பதிவு செய்தார்.

இஷன் கிஷன் 42 பந்துகளில் 52 ரன்கள்(2சிக்ஸர்,8பவுண்டரி) சேர்த்த நிலையில் சன்டகன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு தவண், கிஷன் இருவரும் சேர்ந்து 85 ரன்கள் சேர்த்தனர். இஷான் கிஷன் ஆட்டமிழந்து செல்லும்போதே ஏறக்குறைய இந்திய அணிக்கு வெற்றியை உறுதி செய்துவி்ட்டுச் சென்றார்.

தவண் ேநற்று வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கேப்டனுக்குரிய பொறுப்புடன் ஆடியதை பாராட்டலாம் என்றாலும், ரன்ரேட்டை உயர்த்தும் விதத்தில் தவண் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கலாம். தவண் 95 பந்துகளில் 86 ரன்களுடன்(ஒருசிக்ஸ்,6 பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணி 50 ரன்களை எட்டியபோது தவண் 7 ரன்களுடன் இருந்தார், 13-வது ஓவரில் 100 ரன்களை அணி எட்டியபோது தவண் 16 ரன்களுடன் இருந்தார்.தவண் தனது 57 பந்துகளில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்திருந்தார்.

37-வது ஓவருக்குப்பின் மணிஷ் பாண்டேவுடன் சேர்ந்தபின்புதான் தவண் ஓரளவுக்கு பவுண்டரிகளும், சிக்ஸரையும் அடிக்கத் தொடங்கினார். குறைவான இலக்கு, முன்வரிசை வீரர்கள் அதிரடியாக ஆடியதால் தவண் ஆமை போல் பேட்டிங் செய்துள்ளார், ஆனால், இலக்கு பெரிதாக இருக்கும்பட்சத்தில் இதுபோன்ற டிஃபென்சிவ் ப்ளே சரிவராது.

மணிஷ் பாண்டே நடுவரிசையில் களமிறங்க வாய்ப்பளித்தும் 26 ரன்களில் வெளியேறினார். சாம்ஸனுக்கு காயம் ஏற்படாமல் இருந்தால் நிச்சயம் அவருக்குத்தான் வாய்ப்புக் கிடைத்திருக்கும். பாண்டே தனக்குரிய வாய்ப்பை பயன்படுத்த தவறுகிறார்.
சூர்யகுமார் யாதவ் தனது முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் தனக்கே உரிய ஸ்டைலில் ஆடி 31 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தவண் 86 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பந்துவீச்சில் குல்தீப் யாதவ், சாஹல் இருவரும் மெல்ல ஃபார்முக்குத் திரும்புகிறார்கள். இருவரும் சராசரியாக 5 ரன்கள் விட்டுக் கொடுத்து தலா 2 விக்ெகட்டுகளை வீழ்த்தினர். குர்னல் பாண்டியா, சாஹர் இருவரும் சிறப்பாகப் பந்துவீசினர். அதிலும் குர்னல் பாண்டியா 10ஓவர்கள் வீசி 26 ரன்கள் விட்டுக் கொடுத்து, ஒரு மெய்டன், ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

ஒட்டுமொத்தத்தில் 2-ம் தர அணி என்று கூறியதற்கு சரியான பதிலடியை வழங்கி ரனதுங்கா வாயை அடைத்துள்ளது இந்திய அணி.

இலங்கை அணியைப் பொறுத்தவரை தொடக்கத்தில் 49 ரன்கள் சேர்க்கும்வரை விக்கெட் இழப்பின்றிதான் விளையாடினார்கள். ஆனால், அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இலங்கை அணியில் எந்த ஒரு வீரரும் அரைசதம் அடிக்கவில்லை, எந்த வீரர்களும் சேர்ந்து 50 ரன்கள் வரைபாட்னர்ஷிப் அமைக்கவில்லை, இருப்பினும் 262 ரன்களைச் சேர்த்தனர்.
இலங்கை அணி 300 ரன்கள் வரை அடித்திருக்க முடியும், ஆனால் வீரர்களின் பொறுப்பற்ற பேட்டிங், ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யாமல் இருந்தது போன்றவை ஸ்கோர் வேகத்தை மட்டுப்படுத்தியது. ஒருவேளை 300 ரன்கள் அடித்திருந்தால், நிச்சயம் இந்திய அணிக்கு சவாலாக இருந்திருக்கும்.

50 ஓவர்கள்வரை முழுமையாக ஆடிய இலங்கை வீரர்கள், 159 டாட் பந்துகளை சந்தித்து வீணாக்கினர். ஏறக்குறைய 25 ஓவர்களுக்கு ரன் ஏதும் அடிக்காமல் வீணாக்கியுள்ளனர்.

இலங்கை அணியில் அதிகபட்சமாக கருணாரத்னே(43) ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அசலங்கா(38), சனகா(39) பெர்னான்டோ(33) ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்கள் 20 ரன்களுக்குள்ளாகவே சேர்த்தனர். 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு இலங்கை 262 ரன்கள் சேர்த்தது.