உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்று தொடங்குகிறது!

0
51
dailythanthi

கால்பந்து விளையாட்டின் சிகரமான உலகக்கோப்பை கால்பந்து 1930-ல் இருந்து 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இடையில், உலக போர் காரணமாக 2 முறை தொடர முடியவில்லை. இதுவரை 22 உலகக்கோப்பை தொடர்கள் நடந்துள்ளன. கடைசியாக 2022-ம் ஆண்டு கத்தாரில் அரங்கேறிய உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணி பிரான்சை வீழ்த்தி மகுடம் சூடியது.

இந்த நிலையில் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி மெக்சிகோ சிட்டியில் இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா இணைந்து நடத்தும் இந்த போட்டியில் 48 அணிகள் பங்கேற்கின்றன. அதிக அணிகள் களம் காணும் உலக போட்டி இது தான். அவை 12 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

மெட்லைப் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகளும், 3-வது இடத்தை பெறும் சிறந்த 8 அணிகளும் என 32 அணிகள் 2-வது சுற்றுக்கு (நாக்-அவுட்) முன்னேறும். அதில் இருந்து 16 அணிகள் 3-வது சுற்றை (ரவுண்ட் 16) எட்டும். தொடர்ந்து கால்இறுதி, அரைஇறுதி என யுத்தம் நீண்டு, கடைசியில் ஜூலை 19-ந்தேதி நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி நடைபெறும்.

மெஸ்சி- எம்பாப்பே-கிறிஸ்டியானோ ரொனால்டோ
‘நம்பர் ஒன்’ அணியான பிரான்ஸ், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, 2-ம் நிலை அணியான ஸ்பெயின், இங்கிலாந்து, போர்ச்சுகல் உள்ளிட்ட அணிகள் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பில் முன்னணியில் உள்ளன. உலகக் கோப்பையை அதிக முறை வென்ற பெருமைக்குரிய பிரேசில் அணி (5 முறை) மீண்டும் எழுச்சி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதே நேரத்தில் 4 முறை சாம்பியனான இத்தாலி தொடர்ந்து 3-வது முறையாக உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போதுமே குறிப்பிட்ட வீரர்கள் உலக கால்பந்து அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அந்த வகையில் இந்த சீசனில் கிலியன் எம்பாப்பே, டெம்பிளே (பிரான்ஸ்), யாமின்யமால் (ஸ்பெயின்), லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), கிறிஸ்டியானோ ரொனால்டோ, விட்டின்யா (போர்ச்சுகல்), ஹாரி கேன், ஜூட்

பெல்லிங்ஹாம் (இங்கிலாந்து), வினிசியஸ் ஜூனியர், நெய்மார் (பிரேசில்), எர்லிங்ஹாலன்ட் (நார்வே) உள்ளிட்ட நட்சத்திர வீரர்களின் கால்கள் காட்டும் வித்தையை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here