கந்தப்பளை தேயிலைமலை தோட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியொருவர் அதே தோட்டத்தை சேர்ந்த இளைஞர்களால் கடத்திச்செல்லப்பட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பாலியல் வல்லுறவு மேற்கொண்ட சந்தேகத்தின்பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 12ஆம் திகதி கந்தப்பளை நகரில் திருவிழா ரத பவனியை பார்வையிட சென்றபோதே மேற்படி சிறுமி முச்சக்கரவண்டியில் கடத்திச்செல்லப்பட்டு கொங்கொடிய காட்டுப்பகுதியில் வைத்து மூன்று
இளைஞர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி மயக்கமடைந்த நிலையில் சந்தேகநபர்கள் அவர் மீது வாழை இலைகளை போட்டு மூடிவைத்துவிட்டு தலைமறைவாகினர் என தெரியவருகிறது.
இந்நிலையில், குறிப்பிட்ட காட்டுப்பகுதிக்கு 13ஆம் திகதியன்று புல் வெட்டுவதற்காகச் சென்ற கொங்கோடியா தோட்ட மக்கள், வாழையிலைகளினால் மூடப்பட்டிருந்த சிறுமியை மீட்டுள்ளனர.
தகவலை அறிந்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், கொங்கோடியா மக்களின் உதவியுடன் அச்சிறுமியை மீட்டு, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த வல்லுறவு சம்பவத்துடன் தொடர்புடைய மேற்படி தோட்டத்தை சேர்ந்த நபரொருவரின் குடும்பத்தை தோட்டத்திலிருந்து வெளியேற்றுமாறு தோட்ட மக்கள் நேற்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
மேற்படி சம்பவத்தையடுத்து, கந்தப்பளை பொலிஸாரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் ருவான் த .டி.சில்வா முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட இவர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமி நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.