கம்மன்பிலவுக்கு மூளையில் சுகமில்லை” அமைச்சர் மனோ கணேசன் ஆவேசம்!

0
97

பிரதமர் மோடி, மலையகம் சென்று, தோட்ட தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகளை அமைத்து தர உறுதியளித்துள்ளார். அதேபோல், இலங்கையில், இந்தியா ஏற்கனவே வழங்கிவரும் இலவச அம்புலன்ஸ் என்ற மருத்துவ வாகன வசதியை இன்னும் ஏழு மாகாணங்களுக்கு விஸ்தரிப்பது தொடர்பாகவும் அறிவித்துள்ளார்.

இவை பற்றிய பின்னணிகளை அறியாமல், புரிந்துக்கொள்ள முயற்சி செய்யாமல், இத்தகைய அறிவிப்புகளை செய்ய நரேந்திர மோடி யார்? இலங்கை இந்தியாவின் 30வது மாநிலமா? என்ற கேள்விகளை எழுப்பி, அதன்மூலம் இவற்றுக்கு தவறான அர்த்தங்களை கற்பித்து, சிங்கள மக்களை தூண்டிவிடும் முகமாக, இனவாத பைத்தியம் பிடித்த நிலையில் கூட்டு எதிரணி எம்பி உதய கம்மன்பில பேசி வருகிறார்.

“நீரெல்லாம் திருந்தவே மாட்டீரா” என நான் அவரை கேட்க விரும்புகிறேன். “உமக்கு மூளையில் சுகமில்லை. உமது பைத்தியத்தை சுகப்படுத்த, இந்தியா தந்துள்ள இலவச அம்புலன்ஸ் என்ற மருத்துவ வாகனத்தில் ஏற்றி, இந்திய வைத்தியர் ஒருவரிடம் அழைத்து செல்ல நான் தயார்” என இவருக்கு நான் கூறி வைக்க விரும்புகிறேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நேற்று நள்ளிரவு கடந்து நடைபெற்ற அரசியல் விவாத நேரடி ஒளிபரப்பு நிகழ்விலும் இதுதொடர்பாக விரிவாக சிங்கள மொழியில் பேசிய ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

பிரதமர் மோடி இந்த அறிவிப்புகளை திடீரென வானத்தில் இருந்து இறங்கி வந்து அறிவிக்கவில்லை. 2015ம் வருடம் 13ம் திகதி இலங்கைக்கு முதன்முறையாக நரேந்திர மோடி வந்தபோது, இலவச அம்புலன்ஸ் என்ற மருத்துவ வாகன வசதியை இலங்கைக்கு பெற்று தரும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவரிடம் கோரிக்கை விடுத்தார்.

அதேபோல் தோட்ட தொழிலாளர்களுக்கு வீடுகளை கட்டுவது தொடர்பாக, கொழும்பில் நடைபெற்ற பரஸ்பர பேச்சுவார்தையின் போது, தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேண்டுகோளின் பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 20,000 வீடுகளை இந்திய அரசு கட்டித்தர வேண்டும் என, பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார். இந்த பேச்சில், கூட்டணியின் பிரதி தலைவர் அமைச்சர் பழனி திகாம்பரமும் கலந்துக்கொண்டார். இந்நிலையில் கட்டப்படும் வீடுகள் அமையும் காணிகள், தொழிலாளருக்கு சொந்தமான காணியாக இருக்க வேண்டும் எனவும், குத்தகை காணியில் வீடு கட்ட உதவ முடியாது என்றும் இந்திய அரசு எமக்கு சொன்னது. அதனால், எமது கோரிக்கையை ஏற்று உடனயாக, ஒவ்வொரு தொழிலாளி குடும்பத்துக்கும் 7 பேர்ச் காணி என்ற அமைச்சரவை பத்திரத்தை, அன்றைய பெருந்தோட்ட துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல அமைச்சரவையில் சமர்பித்து நிறைவேற்றினார்.

இந்த பின்னணி வரலாறு கம்மன்பிலவுக்கு தெரியவில்லை. கம்மன்பிலவுடன் சேர்ந்து மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக உழைத்த ஒருசில மலைநாட்டு அரசியல்வாதிகளுக்கும் தெரியவில்லை.

ஆகவே, கூட்டணியின் பங்களிப்புடன் கூடிய எங்கள் அரசாங்கத்தின் ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டே இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேலும் 10,000 வீடுகளை தோட்ட தொழிலாளர்களுக்கு அமைத்து தர முடிவு செய்தார். அதேபோல், இலங்கையில் இலவச அம்புலன்ஸ் என்ற மருத்துவ வாகன வசதி தொடர்பாகவும் அறிவித்துள்ளார். ஏற்கனவே , 4,000 வீடுகள் மலைநாட்டுக்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும், அவை நடைமுறையாகாமல் இழுபறிப்பட்டுக்கொண்டு இருந்தன. அதற்கும் ஒரு பின்னணி இருக்கிறது. அவற்றையும் நாம் சிக்கல்களை நீக்கி செயற்பட வைத்தோம்.

இலவச அம்புலன்ஸ் என்ற மருத்துவ வாகன வசதி மேல், தென் ஆகிய இரண்டு மாகாணங்களுக்கும் அறிவிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டன. மேல்மாகாண ஆரம்ப நிகழ்வில் நானும் கலந்துக்கொண்டு இருந்தேன். இது இனிமேல் ஏனைய ஏழு மாகாணங்களுக்கும் இப்போது விஸ்த்தரிக்கப்படுகிறது. அவ்வளவுதான்.
இவைபற்றிய உண்மை விபரங்கள் கம்மன்பிலவுக்கு தெரியவில்லை.

ஆனால், இவைபற்றி மகிந்த ராஜபக்சவுக்கு தெரியும். நாமல் ராஜபக்சவுக்கு தெரியும். இவை இலங்கை அரசின் கோரிக்கைகளின் பேரில்தான் நடைபெறுகின்றன என அவர்களுக்கு தெரியும். அவற்றை, இலங்கையை தன் மாநிலமாக கருதி, இந்திய பிரதமர் தனிச்சையாக அறிவிக்கவில்லை எனவும் அவர்களுக்கு நன்கு தெரியும். அப்படி அறிவிக்கவேண்டும் என பொறுப்புள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி ஒருபோதும் இந்திய அரசை கேட்காது. இந்திய அரசும் அப்படி செய்யாது. இது இராஜதந்திர நடைமுறைமை. ஆனால், எம்பி உதய கம்மன்பிலவுக்கு இவை ஒன்றும் தெரியவில்லை. அதற்கு அக்காரணம் அவருக்கு மூளையில் சுகமில்லை. அவரை சுகமாக்க, ஒரு இந்திய மருத்துவரிடம், இந்தியா தந்துள்ள இலவச அம்புலன்ஸ் என்ற மருத்துவ வாகனத்தில் ஏற்றி செல்ல நான் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here