இலங்கை பொலிஸ் சேவையில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பின் போது, 2021 ஆம் ஆண்டு அச்செயன்முறை ஆரம்பிக்கப்பட்டு, ஆரம்ப மற்றும் எழுத்துப் பரீட்சைகளில் சித்தியடைந்து, கைரேகை உள்ளிட்ட அனைத்துப் பரீட்சைகளிலும் சித்தியடைந்த பெண் விண்ணப்பதாரர்களின் மருத்துவப் பரிசோதனைகள் பிற்போடப்பட்டதன் காரணமாக, இந்நியமனங்களை வழங்குவதற்கு அதிகாரிகள் இன்றுவரை தவறியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தற்போது இந்த 2021 ஆம் ஆண்டு வர்த்தமானியை இரத்து செய்துவிட்டு, 2026 ஆம் ஆண்டின் புதிய வர்த்தமானியின் ஊடாக வயது எல்லையை மாற்றி, கல்வித் தகைமைகளை அதிகரித்து, புதிய பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களை நியமிக்க அரசாங்கம் தயாராகி வருகின்றது. இதனால் ஐந்து வருடங்களுக்கும் மேலாக நியமனங்கள் இன்றி தவிக்கும் இத்தரப்புக்கு அரசாங்கம் வழங்கும் பதில் என்ன என்பதை அறிய வேண்டி காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பித்து அநீதிக்குள்ளான தரப்பினருடன் இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
2160 மற்றும் 2163 ஆகிய வர்த்தமானி அறிவித்தல்களில் உள்ள பெண் விண்ணப்பதாரர்களை இந்தப் புதிய வர்த்தமானி அறிவித்தலின் கீழ் உள்வாங்குவதற்கும், 2021 ஆம் ஆண்டின் 2215 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் விண்ணப்பித்த பெண் விண்ணப்பதாரர்களை இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையிலிருந்து நீக்கிவிட்டு, இருவேறு விதமாகச் செயற்படுவதானது மனித மற்றும் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் பெண் கான்ஸ்டபிள்களை ஆட்சேர்ப்பு செய்யக்கூட நடவடிக்கை எடுக்கப்படாததால், இவ்வாறு அநீதிக்குள்ளான தரப்பினருக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இதற்காக நான் முன்னின்று குரல் கொடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.




