முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தவறான ஊசி மருந்துக்காக சிறையில் அடைக்கப்பட்டார் என்றால், தவறான கல்வி தொகுதியை அறிமுகப்படுத்தியதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரியவை எவ்வாறு காப்பாற்ற முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று (06) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் “அடுத்த விடயம் இந்த ‘மொடியூல்’ (Module) பிரச்சினை. இந்த விவகாரத்தில் நாம் பிரதமரை அவமதிக்கவில்லை. இதில் உள்ள உண்மை என்னவென்றால், தவறு எங்கே நடந்தது என்பது மாத்திரமல்ல. இப்போது பாருங்கள், அந்தத் தவறை யார் செய்தது? ஊசிகளைச் செலுத்தியது யார்? கெஹலிய ரம்புக்வெல்ல மருந்துகளைக் கொண்டு வந்தார் என்று வைத்துக்கொள்வோம். மருந்துகளைக் கொண்டு வந்தாலும், கெஹலிய ரம்புக்வெல்லவா அந்த ஊசியைப் போட்டார்? இல்லை, வைத்தியசாலையில்தான் அந்த ஊசி போடப்பட்டது. ஆனால் இறுதியில் சிறைக்குச் சென்றது கெஹலிய ரம்புக்வெல்லதான். அதேபோல்தான், இந்த விவகாரத்திலும் பிரதமர் தனது பொறுப்பிலிருந்து விலகிச் செல்ல முடியாது” என கூறினார்.
உதாரணமாக, கடந்த காலங்களில் மாகாண சபையின் வைப்புத் தொகையை (Deposit) காலத்திற்கு முன்பே மீளப் பெற்றதாகக் கூறி நான் சிறைக்கு அனுப்பப்பட்டேன்.
உண்மையில் அந்தப் பணத்தை மீளப் பெற்றவர்கள் தலைமைச் செயலாளர் மற்றும் கணக்காளர் ஆவர்.
ஆனால் சிறைக்குச் சென்றது நான்தான்.
அதேபோல்தான் பிரதமரும் இதிலிருந்து தப்பிக்க முடியாது என குறிப்பிட்டார்.
அத்துடன் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கும் சாமர சம்பத்திற்கும் தண்டனை வழங்கப்பட்டது என்றால், அதே முறையில் பிரதமருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இல்லையெனில், இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.




