தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கடந்த ஒரு வருடகால செயற்பாடுகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது! : சோ. ஸ்ரீதரன்

0
146

தமிழ் முற்போக்கு கூட்டணி உதித்து இப்போது ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் மலையகத்தில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றமானது மலையகத்தின் எழுச்சிக்கு பாரிய பங்காற்றுகின்றது. இத் தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்படுத்திய அரசியல் மாற்றமே தற்போது கூட்டொப்பந்த சம்பளத்துக்கு அப்பால் அரசின் கொடுப்பனவுகள் எம் மக்களுக்கு கிடைக்கின்றது என மத்திய மாகாண சபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பளருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர். திகாம்பரத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் சாமிமலை மாக்கொல தோட்டத்தில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய கிராமம் ஒன்றுக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய மாகாண சபை உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் பிலிப், முன்னாள் அமபகமுவ பிரதேச சபைத்தலைவர் நகுலேஸ்வரன், அமைச்சர் திகாம்பரத்தின் பிரத்தியேக உதவியாளர் கமலதாசன், முன்னாள்  பிரதேச சபை உறுப்பினர் சுரேஸ் மற்றும் அமைப்பாளர்கள், இணைப்பாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் பங்குகொண்டிருந்தனர்.

தொடர்ந்து உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் குறிப்பிடுகையில்,

அமைச்சர் திகாம்பரத்தின் தனிவீட்டுத்திட்ட வேலைத்திட்டங்களானது தற்போது மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தீயினாலும், மண்சரிவினாலும், ஏனைய அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்ட எம்மலையக சொந்தங்களுக்கு உடனடியாக தற்போது வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் அமைச்சர் திகாம்பரத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மலையகத்துக்கான தனிவீட்டுத்திட்டமும், புதிய கிராமங்களும் இன்று மலையகமெங்கும் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டங்கள் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் மக்களுக்கு கையளிக்கப்படவிருக்கின்ற அதேவேளை பெரும்பாலான இடங்களில் தனிவீடுகள் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டு வருகின்றது.

பொகவந்தலாவை கொட்டியாக்கலையில் 150 வீடுகளைக்கொண்ட கிராமமும், அக்கரப்பத்தனை பெங்கட்டன் தோட்டத்தில் (சின்ன தோட்டம்) 150 வீடுகளைக்கொண்ட கிராமமும்  மேலும் தமிழ் முற்போக்கு முன்னணிக்கு மலையக மக்கள் வாக்களித்ததன் விளைவாகவே இன்று மலையகத்தில் இவ்வாறான பாரிய மாற்றமும் நாட்டில் நல்லாட்சியும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் பலத்தினாலாலேயே தீபாவளி முற்பணமாக 10000 ரூபாய் பெற்றுக்கொடுக்கப்பட்டது. தற்போது தனியார் துறைக்கு வழங்கப்பட்ட 2500 ரூபா கொடுப்பனவும் எமது மலையக மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தமிழ் முற்போக்கு முன்னணியின் சாதனையாகும். ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு இவ்வாறான சம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவுகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க எமது தலைவர்கள் எத்தனிக்கின்ற போது மாற்றுத் தொழிற்சங்க அரசியல் வாதிகள் எம் மக்களுக்கு எதுவிதமான கொடுப்பனவுகளும் தமிழ் முற்போக்கு முன்னணியின் போராட்டத்தால் கிடைத்து விடக் கூடாதென்றே அதை தடுக்க முயல்கின்றனர். அமைச்சர் திகாம்பரம் அவர்களின் அரசியல் பலம் அதிகரித்து விடக் கூடாதென்றே  மலையக மக்களை பகடைக்காய்களாக்கி செயற்பட்டுவருகின்றனர். ஆனாலும் நாங்கள் சாதிக்கின்றோம் எம் மலையக மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க முன்னின்று செயற்படுகின்றோம். நாங்கள் மலையக மக்களை அடிமையாக்கி அவர்கள் நிர்க்கதியாக நிற்கின்றபோது தகாத வார்த்தைகளால் அவர்களை நிந்திக்கவில்லை மாறாக மக்களோடு மக்களாக நிற்கின்றோம் மக்களின தேவையறிந்து செயற்படுகின்றோம்.

எமது தலைவர் திகாம்பரத்தின் எண்ணமும் அதுதான். அதேபோல ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இழுபறியிலிருக்கும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான மனோகணேசன், திகாம்பரம், இராதாகிருஸ்னண் ஆகியோர் இந்த அரசாங்கத்துக்கு விடுத்த அழுத்தத்தின் காரணமாக இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்ய வேண்டுமென்ற நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

பிரதமர் அவர்கள் நடுநிலை வகித்து இந்த கூட்டொப்பந்த பேச்சுவார்தையை நடத்தி எமது தொழிலாளர்களுக்குரிய நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்பேன் என உறுதியளித்துள்ளார். எனவே மக்கள் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்தித்து தமிழ் முற்போக்க கூட்டணியின் கரத்தை பலப்படுத்த வேண்டியது மலையக மக்களாகிய உங்களது தலையாய கடமையாகும் எனக் கூறினார்.

(க.கிஷாந்தன்)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here