துருக்கி நில அதிர்வு -20 ஆயிரத்தை தாண்டும் உயிரிழப்பு – உலக சுகாதார நிறுவனம் கணிப்பு

0
86

துருக்கியில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

சிரிய எல்லையை அண்மித்துள்ள தெற்கு துருக்கியின் காஸியான்டெப் நகருக்கு அருகில் நேற்று (06) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கருத்தில் கொண்டு, துருக்கியின் தென்கிழக்கு பிராந்தியத்தில் இன்று முதல் மூன்று மாதங்களுக்கு அவசரகால நிலையை அந்நாட்டு அதிபர் பிரகடனம் செய்தார்.

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என கணிக்கும் உலக சுகாதார நிறுவனம், இரு நாடுகளிலும் 23 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.

இதில், துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள 6,000 கட்டடங்கள் அழிந்து விட்டதாகவும், எல்லையில் உள்ள சில நகரங்கள் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிந்துள்ளதாகவும் இரு நாடுகளின் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

சேதமடைந்த கட்டடங்களில் பெரும்பாலானவை அடுக்குமாடி குடியிருப்புகளாகும். நிலநடுக்கத்துக்குப் பின்னர் இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் இரு நாடுகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துருக்கியில் உள்ள ஹடாய் விமான நிலையத்தில் ஓடுபாதை இரண்டாக பிளவடைந்துள்ளது. துருக்கியின் காசியான்டெப்பில் உள்ள ரோமானிய காலத்தைச் சேர்ந்த வரலாற்று அரண்மனை, நிலநடுக்கத்தின் பின்னர் எவ்வாறு சேதமடைந்தது என்பதை வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

சிரிய உள்நாட்டுப் போரில் இருந்து இலட்சக்கணக்கான அகதிகள் தங்கியுள்ள சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அலெப்போ நகரையும் இந்த நிலநடுக்கம் கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கும் மரணத்திற்கும் இடையில் சிரிய சிறுவர்கள் மீட்கப்பட்ட விதத்தையும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், துருக்கியில் இன்று ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. பிரதான நிலநடுக்கத்திற்குப் பின்னர் துருக்கியில் ஏற்பட்ட நில அதிர்வுகளின் எண்ணிக்கை 120ஐத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு துருக்கியில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here