பாகிஸ்தானில் இன்று மீண்டும் அமைதிப்பேச்சுவார்த்தை: ஈரான் பங்கேற்குமா?

0
8
dailythanthi

அமெரிக்கா–ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில், அதை நிரந்தரமாக்குவதற்காக கடந்த 11-ந்தேதி பாகிஸ்தானில் இரு தரப்பும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் உடன்பாடு எட்டப்படாததால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஈரானின் துறைமுகங்கள் உள்பட அதன் கடற்பகுதிகளை முற்றுகையிட்டது. இது ஈரானுக்கு கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், லெபனானில் சமீபத்தில் இடைக்கால போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை கடந்த 17-ந்தேதி மீண்டும் திறக்கப்பட்டது. இதை டிரம்ப் வரவேற்றாலும், ஈரான் துறைமுகங்களின் முற்றுகையை அமெரிக்கா கைவிடாது என்று அவர் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஈரான், ஹார்முஸ் நீரிணையை நேற்று முன்தினம் மீண்டும் மூடியது. மேலும், அந்த வழியாக செல்ல முயன்ற கப்பல்களுக்கு எதிராக துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இதில் 2 இந்திய கப்பல்களும் சிக்கியதாக தகவல் வெளியாகி, வளைகுடா பிராந்தியம் முழுவதும் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது

இந்நிலையில், அமெரிக்கா–ஈரான் இடையேயான இடைக்கால போர் நிறுத்தம் இன்னும் இரண்டு நாட்களில் முடிவுக்கு வர உள்ளது. அதற்குள் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை நடத்த பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிர் ஈரானுக்கு பயணம் செய்து, அந்நாட்டு உயர் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தானின் இந்த முயற்சியைத் தொடர்ந்து, ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவும் முன்வந்துள்ளது. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையே முரண்பாடுகள் மீண்டும் தீவிரமாகி வரும் நிலையில், பாகிஸ்தானில் இன்று நடைபெற திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தையில் ஈரான் பங்கேற்குமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here