கனடா புள்ளிவிபரத் திணைக்களம் (Statistics Canada – StatsCan) செவ்வாய்க்கிழமை புதிய ஆய்வு தகவலொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கனடாவிற்கு அண்மையில் வருகை தந்த புதிய குடியேறிகளிடையே (Recent Immigrants) சொந்தமாக வீடு வாங்குபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம், கனடாவில் பிறந்தவர்களிடையே (Canadian-born individuals) இந்த விகிதம் குறைவடைந்துள்ளது.
2018 முதல் 2021 வரையான காலப்பகுதியில், ஐந்தாண்டுகள் கனடாவில் வசித்த புதிய குடியேறிகளின் வீட்டு உரிமை விகிதம் 35.7%-லிருந்து 40.2% ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரம், கனடாவில் பிறந்தவர்களின் விகிதம் 50.7%-லிருந்து 47.8% ஆகக் குறைந்துள்ளது.
மாரடைம்ஸ் (Maritimes) மற்றும் மேனிடோபா (Manitoba) ஆகிய பிராந்தியங்களில் புதிய குடியேறிகள் அதிகளவில் வீடுகளை வாங்கியுள்ளனர்.
முதலாம் ஆண்டிலேயே வீடு வாங்கிய குடியேறிகளில் 85%-க்கும் அதிகமானோர், ஏற்கனவே பணி அல்லது கல்வி அனுமதிப்பத்திரங்களில் (Work or study permits) கனடாவில் தங்கியிருந்தவர்களாவர்.
அகதிகளாக (Refugees) வந்தவர்களில் பத்தில் ஒருவர் ஐந்தாண்டுகளுக்குள் வீட்டு உரிமையாளராகியுள்ளார்.
புதிய குடியேறிகள் தங்களின் ஓய்வூதிய சேமிப்பை விட (RRSP), வீடுகளை வாங்குவதற்கே முன்னுரிமை அளிப்பதுடன், அதிக அடமானக் கடன்களையும் (Mortgage debt) பெற்றுள்ளனர்.
தெற்காசிய (South Asian) மற்றும் கிழக்கு ஆசிய (East Asia) குடியேறிகளிடையே வீட்டு உரிமை விகிதம் அதிகமாகக் காணப்படுவதாக இந்த ஆய்வை மேற்கொண்ட சிரேஷ்ட ஆய்வாளர் சாமுவேல் மெக்ஐசக் (Samuel MacIsaac) தெரிவித்துள்ளார்.




